×

அஞ்செட்டி மலைப்பாதையில் தொடர் விபத்து: தடுப்பை உடைத்துக்கொண்டு அந்தரத்தில் தொங்கிய லாரி

தேன்கனிக்கோட்டை: அஞ்செட்டி மலைப்பாதையில், விபத்தில் சிக்கிய லாரி தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு, அந்தரத்தில் தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி மலைப்பாதையில் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வருகிறது. அஞ்செட்டி மலைப்பகுதியில் பல்வேறு கட்டுமானங்கள் நடைபெற்று வருகிறது. இதற்காக தினசரி 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் சிமென்ட் மூட்டைகள், ஜல்லிக்கற்கள் மற்றும் கம்பி, செங்கற்களை எடுத்துச்செல்வதால் இரவு- பகல் என எந்த நேரமும், வாகன போக்குவரத்து காணப்படுகிறது. அஞ்செட்டி மலைகிராமங்களுக்கு போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாததால், அங்கு வசிக்கும் மக்கள் முழுக்க, முழுக்க சரக்கு வாகனங்களையே நம்பியுள்ளனர். இவ்வாறு விதிமீறி இயக்கப்படும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன.

அஞ்செட்டி மலைப்பாதையில், கடந்த 28ம் தேதி  திருமண கோஷ்டி சென்ற பஸ் கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 70 பேர் படுகாயமடைந்தனர். அடுத்த இரு தினங்களில், ராகி பாரம் ஏற்றிச்சென்ற லாரி அதே இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில், ஓட்டுனர் மற்றும் கிளீனர் உயிர்தப்பினர். இந்நிலையில், நேற்று காலை சிமென்ட் பாரம் ஏற்றிக்கொண்டு அஞ்செட்டி நோக்கி சென்ற லாரி, கொண்டை ஊசி வளைவில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை தடுப்பை உடைத்துக் கொண்டு அந்தரத்தில் தொங்கியது. ஓட்டுனர் லாரியிலிருந்து எகிறி குதித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

 அஞ்செட்டி கொண்டை ஊசி வளைவு, மிகவும் குறுகலான எஸ் அமைப்பு கொண்டது. இந்த வழியாக முதன்முறையாக செல்லும்போது, எஸ் போன்ற கொண்டை ஊசி வளைவில், வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனை தடுக்கும் வகையில், கொண்டை ஊசி வளைவில் அபாயகரமான பகுதி என எச்சரிக்கை பலகைகள் அமைக்க வேண்டும். மேலும், கொண்டை ஊசி வளைவு பகுதியில் சாலையை அகலப்படுத்த வேண்டும் என்பது மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. ஆனால், இதுவரை நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்காததால், விபத்துகள் தொடர் கதையாக உள்ளது.



Tags : accidents ,hill road ,Anchetti , Serial accident on Anchetti hill road: A lorry broke the barrier and hung in the gap
× RELATED திருக்கோவிலூர் அருகே இருவேறு...