×

அரசு மருத்துவமனை உதவி தொழிலாளர்கள் 20% போனஸ் கோரி அமைச்சருக்கு கடிதம்

சென்னை: இருபது சதவீத தீபாவளி போனஸ் வழங்கக்கோரி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தமிழ்நாடு அரசு மருத்துவமனை உதவிப்பணி தொழிலாளர்கள் சங்கத்தினர் கடிதம் எழுதியுள்ளனர்.  இதுகுறித்து, சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் யுவராஜ் எழுதியுள்ள கடிதம்:
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் தூய்மை பணி, எலக்ட்ரீசியன், பிளம்பர், காவலர், மற்ற உதவி பணிகள் அனைத்தையும் செய்து வருகின்றனர். இவர்களுக்கு சம்பளம் 4500, 7500 அதிகபட்சமாக ₹9500 வழங்கப்படுகிறது. அது இன்றைய பொருளாதார சூழலை ஒப்பிடுகையில் மிக சொற்ப சம்பளமே.

தமிழக அரசு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு எல்லா தொழிலாளர்களின் உழைப்பையும் அங்கீகரிக்கும் விதத்தில் பலன்களை அறிவித்து சிறப்பித்தது. ஆனால் அர்ப்பணிப்புடன் கூடிய எங்கள் உழைப்பை கண்டுகொள்ளவேயில்லை. தமிழக அரசு எங்களது கோரிக்கைகளை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்குமேயானால் 10,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பெரும் மகிழ்ச்சியுடன் தீபாவளி பண்டிகையை எதிர்கொள்ளும்.  

எனவே, அரசு கொரோனா நோய் தொற்று நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அனைத்து தொழிலாளர்களின் உழைப்பை அங்கீகரித்து ஏதாவது ஒரு விதத்தில் கவுரவித்தது போல் எங்களது அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பையும் அங்கீகரிக்கும் விதத்தில் தீபாவளி போனஸ் கோரிக்கையை ஏற்று அரசு மருத்துவமனை உதவி பணி தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Minister ,government hospital assistant workers , Letter to the Minister demanding a 20% bonus for government hospital assistant workers
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...