ராமேஸ்வரம் கோயிலில் தேய்மானத்தால் நகைகள் எடைகுறைவு; முறைகேடுகள் இல்லை: கோயில் நிர்வாகம் விளக்கம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் தேய்மானத்தால் நகைகள் எடைகுறைவு; முறைகேடுகள் இல்லை என கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் விலை மதிப்புமிக்க தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம், பவளம் உள்ளிட்ட ஆபரணங்கள் 2 ஆம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதனை திருவிழா நாட்களில் பயன்படுத்துவது வழக்கம்.

இதற்கிடையே, நகை மதிப்பீடாளர்கள் குழு, கடந்த ஆண்டு இந்த நகைகளை ஆய்வு செய்த போது, பல நகைகளின் எடைகள் குறைந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக விளக்கமளிக்குமாறு ஓய்வுப்பெற்ற மற்றும் தற்போதைய குருக்கள், பணியாளர்கள் உள்ளிட்ட 30 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து கோவில் இணை ஆணையர் வெளியிட்ட அறிக்கையில், 40 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த நகைகளில் தேய்மானம் காரணமாக எடை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.  தங்கம், வெள்ளி பொருட்களில் தேய்மானம் காரணமாக ரூ.14,43,254 இழப்பு என நகை மதிப்பீட்டாளர் குழு அறிக்கை அளித்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களின் அனைத்து இனங்களும் சரியாக உள்ளன. இந்த விவகாரத்தில் முறைகேடுகள் நடைபெறவில்லை என்றும், கோவிலில் நகைகளின் பாதுகாப்பு குறித்து பக்தர்களோ, பொதுமக்களோ அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>