×

இடிந்து விழும் நிலையில் பரவனாறு பாலம்: 10 மாவட்டங்கள் துண்டிக்கப்படும் அபாயம்

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே கரைமேடு பகுதியில் உள்ள பரவனாறு பாலம் இடிந்து விழும் நிலையில் படுமோசமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.  சேத்தியாத்தோப்பு அருகே கரைமேடு கிராம பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பரவனாறு பாலம் அமைந்துள்ளது. இப்பாலம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும். பாலமானது தற்போது வலுவிழந்தும் சிதிலமடைந்தும், இடிந்து விழும் நிலையில் உள்ளது. அவ்வப்பொழுது விரிசல் விட்டும் வருகின்றது. மேலும் பாலத்தின் பக்கவாட்டு சுவர்கள் இடிவதும் அதனை நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைப்பதும் தொடர்கதையாக உள்ளது.

இதனால் அரசின் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. தற்போது பாலத்தில் மேற்கு புறமாய் இருந்த பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததால் பாதுகாப்புக்காக பேரி கார்டுகளை போட்டு வைத்துள்ளனர். இதனை நகாய் திட்ட அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்யாமல் உள்ளனர். இந்த பாலத்தின் கீழே தான் என்எல்சியின் கரி வெட்டி எடுக்கும் இடத்திலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் பெருமாள் ஏரிக்கும், 20க்கும் மேற்பட்ட கிராமங்களின் விவசாய விளை நிலங்களுக்கு பாசன வசதிக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

ஒவ்வொரு பெருவெள்ளத்தின் போதும் வடகிழக்கு பருவ கனமழையின் போதும் நெய்வேலி என்எல்சியின் உபரி நீருடன் மழை நீரும் கலந்து ஆயிரக்கணக்கான கன அடி தண்ணீர் பரவனாறு பாலத்தை மூழ்கடித்து செல்லும். அவ்வாறு செல்லும் போது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு ஒரு வாரம் போக்குவரத்து தடை சில ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் பத்து மாவட்டங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இவ்வாறான சூழலில் அதிகாரிகள் பாலத்தை சீரமைக்காமல் மெத்தன போக்கை கடைபிடித்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது காருடன் வாலிபர் ஒருவர் இழுத்து செல்ல பட்டு இறந்தார். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நேரடியாக ஆய்வு செய்து பரவனாறு பாலத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Paravanaru ,districts , Paravanaru Bridge, Sethiyathoppu
× RELATED தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு