×

நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றபோது அறுந்து கிடந்த மின்வயரை மிதித்த விவசாயி பலி

*ஒடுகத்தூர் அருகே அதிகாலையில் சோகம்

ஒடுகத்தூர் : ஒடுகத்தூர் அருகே நேற்று அதிகாலையில் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றபோது அறுந்து கிடந்த மின் வயரை மிதித்து மின்சாரம் பாய்ந்து விவசாயி பரிதாபமாக பலியானார். வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த சின்னபள்ளிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் விநாயகம்(70), இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி மரகதம்மாள்(65), இவர்களுக்கு பிரபாகரன் என்ற மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

மேலும், விநாயகத்திற்கு அதே பகுதியில் 2 ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. அதில் ஒரு ஏக்கரில் வாழை கன்று நட்டு வைத்துள்ளார். இன்னும் ஒரு ஏக்கரில் நெல் நடவு செய்வதற்கு ஏற்றவாறு நிலத்தை தயார் செய்து நாள் தோறும் தண்ணீர் பாய்ச்சி வந்துள்ளார்.இந்நிலையில், வழக்கம்போல் நேற்று அதிகாலை சுமார் 5 மணியளவில் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ரவி என்பவரது நிலத்தின் வழியாக சென்ற போது அங்கு அறுந்து கிடந்த மின் வயரை மிதித்துள்ளார்.

இதில், விநாயகம் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற தந்தை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.இதனால், சந்தேகமடைந்த மகன் பிரபாகரன் மற்றும் அவரது தாயார் அங்கு சென்று பார்த்த போது விநாயகம் நிலத்தில் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர்.பின்னர், அங்கு வந்த கிராம மக்கள் உடனே மின் அலுவலகத்திற்கு தகவல் கொடுத்து மின் இணைப்பை துண்டிக்க செய்தனர்.

இதுகுறித்து, தகவலறிந்த வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பார்வையிட்டனர். தொடர்ந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத
பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது சம்பந்தமாக போலீசார் கூறுகையில், ‘ஒடுகத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், நிலத்தில் இருந்த மின் கம்பிகள் அறுந்து விழுந்து இருக்கலாம்.

அதனை கவனிக்காமல் விநாயகம் மிதித்து உயிரிழந்து இருக்கலாம் என்றனர். மேலும், இதுதொடர்பாக, வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒடுகத்தூர் அருகே விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றபோது அறுந்து கிடந்த மின் வயரை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றபோது அறுந்து கிடந்த மின்வயரை மிதித்த விவசாயி பலி appeared first on Dinakaran.

Tags : Odukatur ,Vellore District ,Dinakaran ,
× RELATED அமெரிக்க கணவர் பெயரில் போலி சான்று...