பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதியின் சிறப்பு பாதுகாப்பை நீட்டிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: கடந்த 1992ம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் பாஜ மூத்த தலைவர்கள் அத்வானி உள்ளிட்ட 49 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 2017ம் ஆண்டு முதல் லக்னோவில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் 30ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜ மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த வரையிலும், பல்வேறு அச்சுறுத்தல்கள், கொலை மிரட்டல்கள் காரணமாக  நீதிபதி எஸ்.கே யாதவ்விற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் தீர்ப்புக்கு பின்னர் அது விலக்கப்பட்டது. தீர்ப்புக்கு பின்னரும் தனக்கு சிறப்பு பாதுகாப்பை தொடர்ந்து நீட்டிக்க வேண்டும் என நீதிபதி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு மூத்த நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமண் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “பாபர் மசூதி வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிய லக்னோ சிபிஐ நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ்விற்கு சிறப்பு பாதுகாப்பை நீட்டிக்க முடியாது. அதற்கான அவசியம் தற்போது இல்லை. இதில் அவர் கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி அனுப்பிய கடித்ததை ஆய்வு செய்த பின்னர் தான் நீதிமன்றம் இந்த முடிவை மேற்கொண்டுள்ளது’’ என அவரது கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டனர்.

Related Stories:

>