விளையாட்டு ஆசிரியர்களுக்கான தேர்வு பட்டியல் வெளியீடு: டிஆர்பி அறிவிப்பு

சென்னை: பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு உயர்நிலை மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள விளையாட்டு ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கான தெரிவுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது.

அரசு உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் 2012-2016 கல்வி ஆண்டில்  காலியாக உள்ள விளையாட்டு ஆசிரியர்கள் பணியிடங்களில் சிறப்பு ஆசிரியர்களை நேரடியாக பணி நியமனம் செய்வதற்கு கடந்த 2017ம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான போட்டி எழுத்து தேர்வு கடந்த 23.9.2017ல் நடந்தது. பின்னர் 2018ம் ஆண்டு ஜூன் மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 2018 ஆகஸ்ட் மாதம் சான்று சரிபார்ப்பு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து 2018 அக்டோபர் மாதம் தெரிவுப் பட்டியல் வெளியிடப்பட்டது.

இது குறித்து சிலர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் நீதி மன்றம் வெளியிட்ட உத்தரவுக்கு பிறகு தற்போது திருத்தப்பட்ட தெரிவுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் போட்டி எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், வெயிட்டேஜ் மதிப்பெண், வேலை வாய்ப்பு அலுவலக சீனியாரிட்டி மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் தெரிவுப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தற்போது விளையாட்டு ஆசிரியர்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்ககம் முடிவுகளின் படி பணிநியமனங்கள் வழங்கப்படும். மேற்கண்ட தெரிவுப் பட்டியல், கட்ஆப் மதிப்பெண் குறித்த விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் பார்க்கலாம்.

Related Stories:

>