×

பணியாளர்களும் இல்லை... பராமரிப்பும் இல்லை.... சிதிலமடைகிறது சிவகங்கை ‘ஸ்பைசஸ் பார்க்’

* விளைபொருளுடன் விவசாயிகள், விலைக்கு வாங்கமுடியாமல் வியாபாரிகள் பரிதவிப்பு
* மக்களுக்கு பயனின்றி ‘அம்போ’வாகிறது அரசு கட்டிடங்களும், திட்டமும்

சிவகங்கை: சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள ‘ஸ்பைசஸ் பார்க்’ செயல்படுத்தப்படாத நிலையில் உள்ளது. சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சார்பில் சுமார் 74 ஏக்கர் பரப்பளவில், ரூ.20 கோடி மதிப்பீட்டில் ஸ்பைசஸ் பார்க் (தொழில் பூங்கா) கடந்த 2013ம் ஆண்டு திறக்கப்பட்டது. இதில் அரசு சார்பிலான கட்டிங்கள் ஒரு பகுதியிலும், தனியார் தங்களது பொருட்களை வைத்துக் கொள்ளும் பிளாட் ஒரு பகுதியுமாக பிரிக்கப்பட்டு கட்டிடங்கள் உள்ளன. இதில் தனியாருக்கு 33 பிளாட்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாசனை பயிர்களான மிளகாய், மல்லி, மஞ்சள், இஞ்சி, பெருங்காயம், கறிவேப்பிலை, மிளகு முதலியவற்றை பொடி செய்து மதிப்பு கூட்டி, நவீன இயந்திரங்கள் மூலம் பேக்கிங் செய்யப்பட்டு வெளிநாடுகள், வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் இப்பூங்கா அமைக்கப்பட்டது. இங்கு தொழில் தொடங்குபவர்களுக்கு வங்கி கடனுதவி மற்றும் மத்திய அரசின் 33 சதவீத மானியம் கிடைக்கும். பூங்கா முழுமையாக செயல்படும் நிலையில் ஏற்றுமதி வணிகம் மூலம் ரூ.1,500 கோடி வருவாயும், சுமார் 2 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் திட்டமிடப்பட்டு இப்பூங்கா அமைக்கப்பட்டது.

தமிழகத்தில் இந்த வகையிலான முதல் தொழில் பூங்கா இதுவாகும்.  கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மிளகாய் உற்பத்தியில் முதலிடத்தில் இருந்த சிவகங்கை மாவட்டத்தில், மீண்டும் மிளகாய் உற்பத்தியை பெருக்கும் வகையில் இப்பூங்காவை அப்போதைய மத்திய அரசு அமைத்தது. சிவகங்கை, ராமநாதபுரத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் நிறுவனங்கள் வாசனை பொருட்களை இங்கு கொண்டு வந்து அரைத்து, ஏற்றுமதி செய்யும் வகையில் திறக்கப்பட்ட இந்த ஸ்பைசஸ் பூங்கா இதுவரை முழுமையான செயல்பாட்டிற்கு வரவில்லை. செயல்படாத நிலையில் இருப்பதால் ஸ்பைசஸ் பார்க்கில் உள்ள அனைத்து கட்டிடங்களை சுற்றிலும் புதர் மண்டியது.

பூங்காவில் உள்ள கட்டிடங்களுக்கான அனுமதி பெற எந்த முயற்சியும் இல்லாததால் மாநில அரசின் நகர் ஊரமைப்பு இயக்குநகரத்தின் சார்பிலான அனுமதி, பூங்கா திறக்கப்பட்டு ஆறு  ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தான் வழங்கப்பட்டது. இதையடுத்து கட்டிடங்கள், வளாகங்களை சுத்தம் செய்யும் பணி நடந்தது. ஆனால் அதன்பிறகும் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இல்லை. மாவட்டத்தில் 30 ஆண்டுகளுக்கு முன் என்ன நிலையில், எத்தனை தொழில் நிறுவனங்கள் இருந்ததோ அதே நிலையிலேயே தற்போதும் உள்ளது.

அரசு சார்பில் கூடுதல் சிப்காட்கள், தொழிற்சாலைகள், கூடுதல் எண்ணிக்கையில் தொழிலாளர்கள் பணி புரியும் தனியார் தொழில் நிறுவனங்கள் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டும், பல ஆண்டுகளாக இது குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் மிகப்பெரிய திட்டமான ஸ்பைசஸ் பார்க் திட்டம் செயல்படுத்தப்படாமல் முடக்கப்பட்டிருப்பது இப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த ஆண்டு முதல் செயல்படும்
சிவகங்கை ஸ்பைசஸ் வாரிய துணை இயக்குநர் அஜய் கூறும்போது, ‘‘மாநில அரசின் நகர் ஊரமைப்பு இயக்குநகரத்தின் சார்பிலான அனுமதி ஆறு ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்தது. அதன் பிறகு கடந்த ஆண்டு இறுதி முதல் தொழில் பூங்காவை செயல்படுத்துவதற்கான பணிகள் செய்து வருகிறோம். கொரோனாவால் கடந்த ஆறு மாதங்களாக எந்த பணிகளும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் என்ன நிலையில் உள்ளன என்பது குறித்து அவைகள் இயக்கப்பட்ட பிறகே தெரிய வரும். ஏற்கனவே இங்கு பிளாட் எடுப்பதற்காக ஒப்பந்தம் செய்தவர்களில் சிலர் விலகியுள்ளனர். தற்போது புதிதாக சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பூங்காவை திறப்பதற்கான மற்ற பணிகளும் தற்போது நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு முதல் பூங்கா செயல்படுவதற்கான வாய்ப்பு உள்ளது’’ என்றார்.

முடங்கிய பூங்கா உயிர் பெறுமா?
முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் கூறும்போது, ‘‘பெரும் முயற்சிக்குப்பின் இப்பூங்காவை அமைத்ததன் நோக்கமே வறட்சி மாவட்டமான சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள், வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டுதான். விவசாயிகள், வர்த்தகர்கள் இங்குள்ள பிளாட்களை குத்தகைக்கு எடுக்கும் வகையில்தான் பூங்கா அமைக்கப்பட்டது. இதனால் இப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும். ஆனால் தமிழக அரசு, மாவட்ட நிர்வாகத்தின் மெத்தனத்தால் பூங்கா செயல்படாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது. பல கோடி ரூபாயில் கட்டப்பட்ட கட்டிடங்களும் பயன்பாடில்லாமல் உள்ளது. செயல்படுத்தப்படாமல் தொடர்ந்து முடக்கப்படுவதால் இத்திட்டமே கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் சில ஆண்டுகள் சென்றால் இந்த பூங்காவினால் எவ்வித பயன்பாடும் இல்லை என முழுமையாக முடக்கப்படும். எனவே அவ்வாறு இல்லாமல் முந்தைய மத்திய அரசின் திட்டப்படியே தொழில் பூங்காவை செயல்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

அனுமதிக்கே ஆறு ஆண்டுகள்...
மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் வீரபாண்டியன் கூறுகையில், ‘‘தனியார் தொழிற்சாலைகளும் குறிப்பிட்ட மாவட்டங்களியே தொடங்கப்படுகிறது. ஏற்கனவே இம்மாவட்டத்தில் உள்ள அரசு நிறுவனங்களிலும் நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைத்து ஒப்பந்த அடிப்படையிலான தொழிலாளர்களை குறைந்த ஊதியத்தில் பணியில் சேர்க்கின்றனர். இதனால் சென்னை, திருப்பூர், கோவை உள்ளிட்ட வெளிமாவட்டங்கள் மற்றும் சிங்கப்பூர், மலேசியா, மஸ்கட், துபாய், பக்ரைன், கத்தார் உள்ளிட்ட வெளிநாடுகளிலேயே அதிகப்படியானோர் வேலைக்காக சென்றுள்ளனர்.

சென்ட்ரிங், கொத்தனார், எலெக்ட்ரீசியன், பிளம்பர் உள்ளிட்ட கட்டிட தொழிலாளர்களாகவும், ஹோட்டல் தொழிலாளர்களாகவுமே இம்மாவட்டத்தை சேர்ந்த சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலைக்கு சென்றுள்ளனர். காலம், காலமாக வெளிநாடுகள், வெளி மாவட்டங்களுக்கு சென்று பணிபுரியும் நிலை அரை நூற்றாண்டிற்கு மேலாக தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் ஸ்பைசஸ் போன்ற தொழில் நிறுவனங்ளையும் முடக்குவது கண்டிக்கத்தக்கது. உடனடியாக பூங்காவை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.


Tags : Sivagangai 'Spices Park , No staff ... no maintenance .... Sivagangai 'Spices Park' crumbling
× RELATED பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஆலோசனை..!!