×

தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை விற்பனை விறுவிறுப்பு: கடைகளில் ஜவுளி வாங்க அலைமோதிய கூட்டம்

* விலை சரிவால் நகைக்கடைகளை மக்கள் முற்றுகை
* தி.நகர், புரசைவாக்கம் திக்குமுக்காடியது

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஜவுளி பொருட்கள் வாங்க நேற்று கூட்டம் அலைமோதியது. நீண்ட மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை அதிரடியாக சரிந்ததால் நகைக்கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
தீபாவளி பண்டிகை வருகிற 14ம்தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளியை பொதுமக்கள் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 26 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. அது மட்டுமல்லாமல் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வேறு.

இதனால் தமிழகம் முழுவதும் நேற்று கடை வீதிகளில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அலைமோதியது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இவ்வளவு நாட்கள் வீட்டில் முடங்கி கிடந்தவர்கள் நேற்று குடும்பம், குடும்பமாக வந்து தீபாவளி பண்டிகைக்கான பொருட்களை தேர்வு செய்து வாங்கி சென்றனர். குறிப்பாக சென்னையில் நேற்று தி.நகர், புரசைவாக்கம், பழைய வண்ணாரப்பேட்டை வண்ணாரப்பேட்டை, பாடி உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தி.நகரில் நேற்று காலை முதல் மக்கள் கூட்டம் திக்குமுக்காடியது.

மாலையில் கூட்டம் இன்னும் இரட்டிப்பானது. கூட்டம் அதிகமானதை தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டு மக்களை ஒழுங்குப்படுத்தி அனுப்பி வைத்தனர். நகைக்கடைகள்: விடுமுறை தினமான நேற்று தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. வழக்கமான நாட்களில் நீண்ட நேரம் நின்று நகைகளை பார்த்து வாங்கும் அளவுக்கு கூட்டம் இல்லாமல் இருந்தது. ஆனால் நேற்று கூட்டம் அதிகமாக இருந்ததால், சாவகாசமாக நகைகளை தேர்வு செய்ய முடியாத நிலை காணப்பட்டது.

இது குறித்து நகைக்கடைக்காரர்கள் கூறுகையில், “தங்கம் விலை குறைவு, விஷேச தினங்கள் காரணமாக நகை வாங்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டியுள்ளனர். இதுவே கூட்டம் அதிகரிக்க காரணம். எனினும் வாடிக்கையாளர்களும் தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. இன்னும் விலை குறைந்தால் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கிறோம்” என்றனர்.


Tags : Deepavali ,Crowds ,Tamil Nadu ,shops , Deepavali sales in full swing across Tamil Nadu: Crowds flock to buy textiles in shops
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...