×

போதையால் சீரழியும் இளைஞர்கள் பட்டாளம்: கஞ்சா மாபியாக்கள் கையில் சென்னை உள்பட 4 மாவட்டங்கள்: 10 ஆயிரம் முதலீடு செய்தால் 50 ஆயிரம் லாபம்

சினிமா பிரபலங்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை ஏஜென்ட்

சென்னை: தமிழகத்தில் கஞ்சா விற்பனையில் தலைநகரான சென்னை முதலிடத்தை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், கொரோனா தடுப்பு காலத்தில் டாஸ்மாக் கடைகளை மூடியதுதான். ஏன் என்றால், முழு ஊரடங்கு நேரத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் போதைக்கு அடிமையானவர்களுக்கு மதுபாட்டில்கள் கிடைக்கவில்லை. இதனால் போதை ஆசாமிகள் கஞ்சா பக்கம் திரும்பினர். அவர்களை சரியாக கஞ்சா வியாபாரிகள் பயன்படுத்திக் கொண்டனர். கஞ்சா விற்பனைக்காக கஞ்சா வியாபாரிகள் ரவுடிகள் உதவியை நாடினர். இதற்கு காரணம், போலீசாரின் கெடுபிடியில் இருந்து தப்பித்து ரவுடிகளின் ஆதரவாளர்கள் மூலம் எளிமையாக குடிமகன்களுக்கு கஞ்சா விற்பனை செய்துவிடலாம் என்று கருதினர். அதன்படி கடந்த 7 மாதங்களாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் காய்கறி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் வாகனங்கள் மூலம் எளிமையாக கஞ்சாவை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சென்று தங்களது விற்பனையை கஞ்சா வியாபாரிகள் விரிவுபடுத்தினர். அவர்கள் நினைத்தபடி அது வெற்றியும் பெற்றது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மூன்றாம் தரம் கஞ்சா 5 கிராம் முதல் 10 கிராம் வரை சிறு சிறு பொட்டலங்களாக 50 முதல் 150 வரை கூவி கூவி விற்பனை செய்து வருகின்றனர். 5 கிராம் கஞ்சாவை வாங்கி புகைத்தால் போதும் 6 முதல் 8 மணி நேரம் வரை போதை நிற்கிறது. அதுவே, டாஸ்மாக் கடைகளில் ஒரு குவாட்டர் மது பாட்டில் 105க்கு வாங்கி அடித்தால் 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் மட்டுமே போதை நிற்கிறது. இதனால் மதுபிரியர்களுக்கும் கொரோனா முழு ஊரடங்கில் கஞ்சாவுக்கும் மதுவுக்கும் இடையே உள்ள போதை வித்தியாசம் தெரிய தொடங்கியது. அதன் காரணமாகவே கஞ்சாவுக்கு மவுசு அதிகரித்தது.  அதேநேரம், கஞ்சா போதை எந்த நிலையிலும் இடையில் தெளியாது. ஆனால், மது போதையில் உள்ளவர் தலையில் தண்ணீர் அல்லது எலுமிச்சை ஜூஸ் மற்றும் மோர் கொடுத்தால் உடனே சம்பந்தப்பட்ட நபருக்கு போதை தெளிந்துவிடும். குறைந்த செலவில் நிறைந்த போதை கஞ்சா தருவதால் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் கஞ்சாவுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டது.

மேலும், கஞ்சாவில் 10 ஆயிரம் முதலீடு செய்தால் சம்பந்தப்பட்ட நபருக்கு 50 ஆயிரம் வரை லாபம் கிடைக்கிறது. சிறிய முதலீடு பெரிய லாபம். இதனால்தான் 4 மாவட்டங்களிலும் கஞ்சா விற்பனை அதிகரிக்க காரணம் என்று போதை ஆசாமிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா தடுப்பு காலக்கட்டத்தில் கஞ்சா விற்பனை 4 மாவட்டங்களிலும் கொடிகட்டி பறந்தது. கல்லூரி மாணவர்கள் முதல் ரவுடிகள் வரை அனைவரும் கஞ்சா விற்பனையை அமோகமாக செய்தனர்.
பின்னர் டாஸ்மாக் கடைகள் திறந்ததும் முதல் 2 நாட்களுக்கு மக்கள் மதுபாட்டில்கள் வாங்க பல கிலோ மீட்டர் நீண்ட வரிசையில் நின்று மது வாங்கினர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தடுப்பு காலத்தை விட தற்போது டாஸ்மாக் கடைகளின் வருவாய் படிப்படியாக குறைந்து வந்தது. இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் ரகசியமாக ஒரு சர்வே எடுத்தனர். அதில், கஞ்சா விற்பனை அதிகரித்ததால் தான் மது விற்பனை குறைந்தது என்று அதிர்ச்சி தரும் தகவல் தெரியவந்தது.

இதைதொடர்ந்து, கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் தமிழக காவல் துறைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதன் பிறகே சென்னை உட்பட 4 மாவட்டங்களில் போலீசார் கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை கைது செய்ய தொடங்கினர். கஞ்சா வியாபாரிகள் பலர் ரவுடிகள் என்பதால், போலீசாரின் ரகசிய தொடர்பு மூலம் தடையின்றி கஞ்சாவை விற்பனை செய்து வருகின்றனர். வழக்கமாக, ஆந்திராவில் இருந்து ரயில்கள் மூலம்தான் சென்னைக்கு கஞ்சா வரும். ஆனால் கொரோனா காரணமாக சிறப்பு ரயில்கள் தவிர மற்ற ரயில்கள் இயக்கப்படாததால் தற்போது காய்கறி மற்றும் டேங்கர் லாரிகளில் மறைத்து வைத்து ஆந்திராவில் இருந்து எளிமையாக கஞ்சா கடத்தி வரப்படுகிறது.
சென்னையில் மூன்றாம் தரம் கஞ்சாதான் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. முதல் தரமான கஞ்சா வியாபாரிகளால் செல்லமாக ‘கிரீன்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. கிரீன் கஞ்சாவில் பல வகைகள் உள்ளன.

அதில் ‘ஓஜி’ வகை கிரீன் கஞ்சா 100 கிராம் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையில் விலை போகிறது. இந்த வகை கஞ்சாவை தொழிலதிபர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பயன்படுத்துகின்றனர். ‘மலாலா’ வகை கிரீன் கஞ்சா 100 கிராம் ₹3 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த வகை கஞ்சாவை வசதியான கல்லூரி மாணவர்கள் பயன்படுத்துகின்றனர். ‘பிளாக்ஸ்’ வகை கஞ்சா சற்று கரும்பழுப்பு நிறத்திலும், விதைகள் அதிகம் காணப்படும். இந்த வகை கஞ்சா தற்போது 100 கிராம் ஆயிரம் முதல் 1,500 வரை விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தற்போது அதிகளவில் ‘பிளாக்ஸ்’ மற்றும் ‘மலாலா’ வகை கஞ்சா தான் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த இரண்டு வகை கஞ்சா விற்பனை செய்யும் நபர்கள் மற்றும் வியாபாரிகளை மட்டும்தான் போலீசார் கைது செய்து வருகின்றனர். ஆனால் உயர் வகையான ‘ஓஜி’ வகை கிரீன் கஞ்சாவை விற்பனை செய்யும் நபர்களை போலீசார் இதுவரை கைது செய்யவில்லை. இவர்கள் அனைவரும் தொழிலதிபர்களாகவும், சினிமா பிரபலங்களாகவும் உள்ளனர். இதனால், அவர்களை போலீசார் நெருங்குவது கிடையாது.

சென்னை புறநகரங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தான் அதிகளவில் பண்ணை வீடுகள், ரிசாட்டுகள், கிளப்கள் உள்ளன. இதனால் பெரிய அளவில் கஞ்சா வியாபாரிகள் பல கோடிக்கு ஆந்திரா மற்றும் கோவாவில் இருந்து முதல் தரம் கொண்ட கஞ்சாவை இறக்குமதி செய்கின்றனர். இது அனைத்தும் போலீசாருக்கும் தெரியும். ஆனால் அவர்களுக்கு முறையாக மாமூல் செல்வதால் அவர்கள் கண்டுகொள்வது கிடையாது. பண்ணை வீடுகள், ரிசாட்களில் நடைபெறும் பெரும்பாலான தொழிலதிபர்களின் விருந்து நிகழ்ச்சிகள், சினிமா பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் ‘ஓஜி’ வகை கிரீன் கஞ்சா சப்ளை செய்யப்படுகிறது.  அதேபோல், இந்தியாவில் தலைசிறந்த தனியார் பல்கலைக்கழகங்கள் அதிகளவில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில்தான் உள்ளன. இந்த தனியார் பல்கலைக்கழகங்களில் வெளிநாடுகள், வெளி மாநிலங்களை சேர்ந்த வசதியான மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். அதில் பெரும்பாலான மாணவர்கள் கஞ்சா, பிரவுன் சுகர், அபின் உள்ளிட்ட போதைக்கு அடிமையானவர்களாக உள்ளனர்.

இவர்களை குறிவைத்து கஞ்சா வியாபாரிகள் உயர் தரம் கொண்ட கஞ்சாவை விற்பனை செய்கின்றனர். பிரச்னை ஏற்படும்போது மட்டும் போதை பொருட்கள் விற்பனை செய்யும் கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்து வருகிறனர். பிறகு அதைப்பற்றி போலீசார் கண்டுகொள்வதில்லை. ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வரும் கஞ்சாவின் முகத்துவாரமே வடசென்னைதான். மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்ட கஞ்சா, இரவு நேரங்களில் ரகசியமாக தரம் பிரித்து மாவட்டம் வாரியாக பிரித்து பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனங்களில் கஞ்சா வியாபாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்கு பின்னால் மிகப்பெரிய கும்பல் இயங்கி வருகிறது. சென்னையில் இரண்டாம் தரம் கொண்ட ‘பிளாக்ஸ்’ வகை கஞ்சா விற்பனை செய்யும் நபர்கள், கஞ்சா வியாபாரிகளைதான் போலீசார் தற்போது கைது செய்து வருகின்றனர்.

அந்த வகையில், கடந்த மூன்று மாதங்களில் அதாவது கடந்த 6ம் தேதி வரை மாநகர காவல் எல்லையில் மட்டும் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்டதாக 301 வழக்குகள்  சென்னை முழுவதும் பதிவு செய்யப்பட்டு, 1,680 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கஞ்சா கடத்தியதாக 368 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். மேலும், கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கஞ்சா வியாபாரிகளுக்கு அவர் எச்சரிக்கையும் விடுத்துள்ளார். ஆனால், மாநகர் கமிஷனர் எச்சரிக்கையையும் மீறி தடையின்றி மாநகரம் முழுவதும் கஞ்சா விற்பனை  தொடர்ந்து நடந்து வருகிறது.
உதாரணமாக, கடந்த 6ம் தேதிக்கு பிறகு சென்னை மாநகரில் மட்டும் 279 கிலோ 210 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 4 பெண்கள் உட்பட 43 பேரை போலீசார் கைது ெசய்துள்ளனர். காவல்துறை அதிகாரிகள் மட்டத்தில் கஞ்சா விற்பனையை சென்னை உட்பட 4 மாவட்டங்களில் முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுத்தாலும், கீழ் நிலையில் உள்ள போலீசார் உதவியுடன் கஞ்சா விற்பனை மற்றும் கஞ்சா கடத்தலை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.

சென்னை உட்பட 4 மாவட்டங்களில் கஞ்சாவை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்றால் கஞ்சா வியாபாரிகள் மற்றும் ரவுடிகளுடன் தொடர்பில் உள்ள போலீசாரை கண்காணித்து நடவடிக்கை எடுத்தால் கட்டுப்படுத்த முடியும். இல்லையென்றால், கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த முடியாது. சில மாதங்களுக்கு முன்பு பாண்டிபஜார் காவல்நிலையத்தில் குற்றவாளி ஒருவனை பழிவாங்க உளவுப்பிரிவு காவலரே தனது பைக்கில் கஞ்சா கொண்டு வந்து குற்றவாளி பைக்கில் வைத்த சம்பவம், மற்றும் அபிராமபுரம் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமை காவலர் ஒருவர், மாமூல் தகராறில் கடை உரிமையாளர் ஒருவரின் காரில் சிறுவர்களை வைத்து கஞ்சா பதுக்கி சிக்க வைத்த சம்பவங்களும் சென்னையில் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட போலீசாரும் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று கஞ்சா வியாபாரிகளுடன் பல போலீசார் கைகோர்த்து உள்ளதை உயர் காவல்துறை அதிகாரிகள் கவனிக்கவில்லை என்றால், சென்னை உட்பட 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறிதான் என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags : Army ,districts ,Chennai , Army of youth degenerating due to intoxication: 4 districts including Chennai in the hands of cannabis mafias: 50 thousand profit if you invest 10 thousand
× RELATED இஸ்ரேல் ராணுவத்தை கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்