கால்கள் பாதி...ஃபுளோரல் பூட்ஸ் மீதி!

நன்றி குங்குமம்

அதேதான்! ஃபுளோரல்... அதாவது மலர்கள் தீம்! ஃபேஷன் என்னும் சொல் வருவதற்கு முன்பே தோன்றிய டிசைன்களில் இந்த ஃபுளோரலை சேர்க்கலாம். எப்போதும் பசுமை மாறாமல் எக்காலத்திலும் வலம் வரும் ஃபேஷன் ஃபுளோரல் டிசைன்ஸ்தான். எந்த உடையிலும், ஆக்ஸசரிஸிலும் இந்த பூக்கள் டிசைன்ஸ் பொருந்தும். சோஃபா, மெத்தை, வீட்டுச் சுவர்கள்... என ஃபுளோரல் எதிலும் இடம்பெறும். எனில் பூட்ஸ் எம்மாத்திரம்?!இதோ வந்தாச்சு! ‘‘நீங்க வெஸ்டர்ன் விரும்பியா இருந்தா மட்டும் இந்த பூட்ஸை பயன்படுத்துங்க. மத்தபடி புடவைக்கு... குர்தாவுக்கெல்லாம் அணியாதீங்க... அப்புறம் சிரிப்பா சிரிக்கப்படுவீங்க!’’ புன்னகையுடன் பேச ஆரம்பிக்கிறார் ஃபேஷன் டிசைனர் விக்கி கபூர். ‘‘இந்தியா மாதிரியான வெப்ப நாடுகளுக்கு பூட்ஸே திணிப்புதான்! உறையும் அளவுக்கு பனி கொடுக்கிற ஐரோப்பிய - அமெரிக்க நாடுகளுக்குதான் பூட்ஸ் சரிப்படும்.ஆனா, இங்கயும் குளிர் காலம் இருப்பதால்... ஏசி அறைலயே பலரும் பெரும்பாலும் இருப்பதால் பூட்ஸ் அணியலாம்! இதை மனசுல வைச்சுதான் ஃபுளோரல் பூட்ஸ் வந்திருக்கு.

தில்லிலயும் பனிக்காலங்கள் கொடூரமானது. ஸோ, தில்லி... தில்லிக்கு மேல இருக்கற இந்தியப் பகுதிகள்ல பூட்ஸ் சக்கைப்போடு போடுது. ஃபேஷன், சினிமா காரணமா மும்பைலயும் பூட்ஸ் கலாசாரம் பரவியிருக்கு. தென்னிந்தியா பக்கம் பூட்ஸ் ஃபேஷன் குறைவுதான்...’’ என்ற விக்கி கபூர் ஐரோப்பிய, அமெரிக்க மக்களுக்கு பூட்ஸ் என்பதே காலம் காலமாக இருந்து வரும் ஃபேஷன் என்கிறார். ‘‘அதனாலேயே பூட்ஸ்கள்ல நிறைய எக்ஸ்பரிமெண்ட் செய்யறாங்க. கால்களைக் கவர் செய்யணும்... குளிர் தெரியக்கூடாது.... ஸோ, 19ம் நூற்றாண்டு ஆரம்பத்துல கெளபாய் பூட்ஸை ஃபேஷன்ல சேர்த்துக்கிட்டாங்க. கௌபாய் குழு பெண்கள் தங்களுடைய ஷூஸ்ல எம்பிராய்டரி, பெயின்டிங்கில் டிசைன்ஸ் வரைவாங்க. அதை அடிப்படையா வைச்சுதான் ஃபுளோரல் தீம் உருவாகி ஃபேஷனாச்சு. பொதுவா எந்த உடல்வாகு உள்ளவங்களும் எந்த ஃபேஷனையும் பயன்படுத்தலாம்.

ஆனா, எப்படி அதை அணிகிறோம் என்பதுதான் முக்கியம்! ‘நீ ஒல்லியா இருக்க... அதனால் இந்த உடை உனக்கு பொருந்தாது’; ‘நீ குண்டாக இருக்க... உனக்கு இது நோ...’ இப்படி எந்த டிசைனரும் சொல்ல மாட்டாங்க. எல்லா உடல் அமைப்புக்கும் எல்லா ஃபேஷனையும் சரியா பொருத்தறதுதான் டிசைனர் வேலை. இப்ப இந்த ஃபுளோரல் பூட்ஸுக்கு வருவோம். மைக்ரோ மினி ஸ்கர்ட், ஷார்ட்ஸ், ஷார்ட் கவுன், ஸ்லிட் கவுன், 3/4 நீள பாட்டம், கவுன்ஸ்... ஆகியவற்றுக்கு இந்த பூட்ஸ் கச்சிதமா பொருந்தும். அதாவது முட்டிக்குக் கீழ இறங்காத உடைகளுக்கு பூட்ஸ் பர்ஃபெக்டா செட் ஆகும். முழு பாட்டம்தான்னு அடம்பிடிச்சா... சரி போகட்டும்னு கால்களை ஒட்டின லெக்கிங்ஸ், பென்சில் டிப் ஜீன்ஸ், கிராப் பேன்ட்ஸுக்கு பூட்ஸ் அணியலாம்.

முக்கியமா ஃபுளோரல் தீம்ல பூட்ஸ் இருப்பதால் டிரெஸ்ல டிசைன்ஸ் இருக்கக் கூடாது அல்லது குறைச்சலான டிசைன்ஸ் உள்ள டிரெஸ் அணியணும்.

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... பூட்ஸ் அணியறவங்க கால்களை நல்லா பராமரிக்கணும். பூட்ஸ் அணிஞ்சா எதிர்ல இருக்கறவங்க பார்வை கால்கள்லதான் முதல்ல விழும். அதனால முடிஞ்சவரை சீரான ஸ்கின் டோன்களா வெச்சிக்கிட்டா பூட்ஸ் உங்க அழகுக்கு அழகு சேர்க்கும்!’’ கண்சிமிட்டுகிறார் விக்கி கபூர்.

தொகுப்பு: ஷாலினி நியூட்டன்

Related Stories:

>