ஊரடங்கால் 6 மாதங்களாக மக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ள மெரினா கடற்கரை நவம்பர் மாதம் திறப்பு? சென்னை உயர் நீதிமன்றம் எதிர்பார்ப்பு

சென்னை: கொரோனா ஊரடங்கால் 6 மாதங்களுக்கு மேல் பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ள மெரினா கடற்கரை நவம்பர் மாதம் திறக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் மீன் விற்பனையை முறைப்படுத்துவது, மெரினா கடற்கரையை சுத்தப்படுத்துவது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் ரமேஷ் அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு 2வது முறையாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் ஊரடங்கு அக்டோபர் 31 வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால், அக்டோபர் 31வரை மெரினா கடற்கரையை பொதுமக்களுக்காக பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்றார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், நவம்பர் 11ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மெரினாவில் ஆக்கிரமிப்புகள் முளைத்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இதை எப்படி சரி செய்யப் போகிறீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு விட்டன என்றார். சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆஜராகி, மண்டல உதவி ஆணையர் தலைமையிலான குழு லூப் சாலையில் இருந்த 65 ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளது. கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்ததால் வியாபாரம் செய்ய மீண்டும் வந்து விட்டனர். மீனவர் சங்க தலைவர்களுடன் கலந்து பேசி, இனிமேல் ஆக்கிரமிப்புகள் முளைக்காமல் பார்த்துக் கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.

பின்னர் மீன் சந்தை அமைப்பது, நடை மேம்பாலம் அமைப்பது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு வக்கீல், நிலத்தை வகை மாற்றம் செய்வது தொடர்பான கோப்பு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து நவம்பர் 11ம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மெரினா கடற்கரையில் பொது மக்களுக்கு எப்போது அனுமதி வழங்கப்படும் என்று கேட்டனர். அதற்கு ஆணையர் பிரகாஷ், மெரினாவில் அனுமதி வழங்கினால் ஏராளமான மக்கள் கூடிவிடுவர். மெரினாவில் மக்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், மெரினாவில் நவம்பர் மாதம் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரைகளை மேம்படுத்த வேண்டும். மெரினாவை தூய்மையாக வைக்க ஏதுவாக கடற்கரையில் தினமும் காலை, மாலையில் மாநகராட்சி ஆணையரும், போலீஸ் கமிஷனரும் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். நீதிபதிகளும் நடை பயிற்சி செய்தால் எல்லாம் சரியாகும் என்று தெரிவித்தனர். பின்னர் வழக்கு விசாரணையை நவம்பர் 11ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அன்றைய தினமும் காணொளியில் ஆஜராக இரு அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தினர்.

Related Stories:

>