×

இதுதான்டா இந்தியச் சிறைகள்!

நன்றி குங்குமம்

சுகாதாரமின்மை, மனிதத்தன்மையற்ற பரிபாலனம், நிதி போதாமை, ஊழல், ஊழியர் போதாமை, போதிய உட்கட்டமைப்புகள் இல்லாமை ‘கைவிலங்குகள் கல்லறைக் கற்களைவிட கனமானவை’ என்றொரு கவிதை வரி உண்டு. சிறைத் தண்டனை கொடூரமானது என்றால் இந்தியச் சிறைகள் அந்தக் கொடூரத்தின் உச்சம். சுகாதாரமின்மை, ஊழல், மனிதத்தன்மையற்ற பரிபாலனம், போதிய உட்கட்டமைப்புகள் இல்லாமை, நிதி போதாமை, ஊழியர் போதாமை என இந்தியச் சிறைத் துறையின் குறைபாடுகள் பட்டியலிட அனுமன் வால் போல் நீண்டுகொண்டே செல்லும். மனித உரிமை ஆணையம் உட்பட பல்வேறு சமூக செயல்பாட்டு அமைப்புகள், சமூகப் போராளிகள் இந்தியச் சிறைத்துறையை சீரமைக்க பல ஆண்டுகளாகத் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், பலன் பூஜ்யத்துக்கு மேல் ஒன்றுமே இல்லை. சிறைச்சாலைகள் இந்திய அரசியல் அமைப்பின்படி ஏழாவது பட்டியலின் நான்காவது வகையின் கீழ் மாநிலங்களின் கட்டுப்பாட்டுக்கு உரியது என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் சட்டம் 1894ன் கீழும் ஒவ்வொரு மாநிலத்துக்குமான சிறைச்சாலை கையேடுகளின் அடிப்படையிலும் சிறைகள் நிர்வகிக்கப்படுகின்றன. சிறையின் பாதுகாப்பை மேம்படுத்துவது, சிறைச்சாலைகளை மராமத்து செய்வது, மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்துவது, சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளைப் பராமரிப்பது, பெண் குற்றவாளிகளைப் பராமரிப்பது, சிறைக் கைதிகளுக்கு கைவேலைகள், கைத்தொழில்கள் பயிற்றுவிப்பது, சிறைச்சாலைகளை நவீனப்படுத்துவது போன்ற பணிகளை மத்திய அரசு மேற்கொள்ளலாம்.

இந்தியாவில் உள்ள சிறைகள்… துணை சிறைச்சாலைகள், மாவட்ட சிறைச்சாலைகள், மத்திய சிறைச்சாலைகள் என மூன்று படிநிலைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இதைத் தவிர பெண்கள் சிறைகள், சிறுவர் சீர்திருத்தகங்கள், திறந்தவெளிச் சிறைகள், சிறப்புச் சிறைகள் ஆகிய பிரிவுகளும் உள்ளன.தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் இந்திய சிறைச்சாலை புள்ளிவிவரத்தின்படி இந்தியச் சிறைகள் சராசரியாக அதன் கொள்ளளவை விடவும் பதினான்கு சதவீதத்துக்கு மேல் அதிகமான கைதிகளால் நிரம்பி வழிகின்றன. இது ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மூன்றில் இரண்டு குற்றவாளிகள் வழக்கு நடக்கும் நிலையில் இருப்பவர்கள் என்பதுதான் கொடுமை. இதிலும் சத்தீஸ்கர், தில்லி போன்ற மாநிலங்களில் அதன் கொள்ளிடத்தை விடவும் இரு மடங்கு அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கு அடுத்த நிலையில் மேகாலயா 77.9%, உத்தரப்பிரதேசம் 68.8%, மத்தியப் பிரதேசம் 39.8% என கூடுதல் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் உள்ள கைதிகளில் 62,6669 பேர் வழக்கு நிலுவைக் குற்றவாளிகள்தான். பீகாரில் 23,424 பேரும், மஹாராஷ்ட்ராவில் 21667 பேரும் இப்படி அண்டர் ட்ரயலில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியச் சிறைகளில் உள்ளவர்களில் 67% பேர் அண்டர் ட்ரயல் நிலையில் இருப்பவர்கள்தான்.

இவர்கள் வழக்கு நிலுவை, விசாரணை,  துப்பறிதல் எனப் பல்வேறு நிலைகளில் இன்னமும் முழுதாக குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் இருப்பவர்கள். நீதிமன்றங்களில் வழக்குகள் மலைபோல் குவிந்திருப்பதுதான் இதற்குக் காரணம். உலகின் பிற நாடுகளோடு ஒப்பிடும்போது இந்த வழக்கு நிலுவைக் குற்றவாளிகள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம். உதாரணமாக இது இங்கிலாந்தில் 11%, அமெரிக்காவில் 20%, பிரான்சில் 29% என்பதாக இந்த நிரம்பி வழிதல் உள்ளது. இந்தியாவில் இப்படி வழக்கு நிரூபிக்கப்படாத நிலையில் சிறைப்பிடிக்கப்பட்டிருப்பவர்களில் 25% பேருக்கு மேல் ஓராண்டுக்கும் மேலாக சிறையில் வாடுபவர்கள். ஒட்டுமொத்த இந்தியாவிலும் இப்படி மூன்று கோடிக்கும் அதிகமான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளின் படி நிரூபிக்கப்படாத குற்றவழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகள் போலவே நடத்தப்பட வேண்டும். ஆனால், இவர்கள் பெரும்பாலும் உளவியல் மற்றும் உடலியல் தாக்குதலுக்கு ஆளாகும் நிலையே இந்தியச் சிறைகளில் உள்ளது. மேலும் இந்த முறையற்ற தண்டனையால் அவர்கள் தங்கள் குடும்ப உறவுகள், நண்பர்கள், சமூக அந்தஸ்து, செல்வம் உட்பட எதிர்காலத்தையுமேகூட தொலைத்துவிட நேர்கிறது என்பதுதான் துயரம். பொதுவாக அண்டர் ட்ரயலில் சிறையில் இருப்பவர்களுக்கு என சட்டச் சலுகைகள் இருக்கின்றன. ஆனால், இப்படிச் சிறையில் இருப்பவர்களில் பெரும்பகுதியினர் ஏழைகள்.

அதிலும் பலர் சட்டத்தில் தங்களுக்கு உள்ள நியாயமான உரிமை பற்றி எந்த விழிப்புணர்வும் இல்லாதவர்கள், அகதிகள். இதனால் வழக்குரைஞர்களை நாடவோ, பிணையில் வெளிவரவோ வாய்ப்பு இல்லாமல், வாய்ப்பு இருப்பதை அறியாமல் தவிப்பவர்கள். இப்படி அண்டர் ட்ரயலில் இருப்பவர்கள் மீது கருணையோடு கடந்த 2005ம் ஆண்டு சட்டப்பிரிவு 436ஏ உருவாக்கப்பட்டது. இதன்படி, ஒரு குற்றத்துக்கான தண்டனைக் காலத்தில் பாதியை அது நிரூபிக்கப்படாத நிலையிலேயே சிறையில் கழித்தவர்கள், பிணைத் தொகை கொடுத்தோ அல்லது கொடுக்காமலோ விடுவிக்கப்பட வேண்டும் என்று சொல்கிறது. மரணதண்டனை அல்லது ஆயுள் தண்டனை பெற சாத்தியமான குற்றங்களுக்கு மட்டுமே இந்த சட்டம் பொருந்தாது. ஆனால், நடைமுறையில் இது சாத்தியமாவதில்லை. இந்தியச் சிறைகளின் இன்னொரு முக்கிய போதாமைகளில் ஒன்று சிறைத் துறைப் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை போதாமை. இன்றும் சுமார் 33% காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில்தான் சிறைச்சாலைகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. 36% அதிகாரிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. புகழ் பெற்ற திகார் சிறை இந்த ஆள் பற்றாக்குறையில் இந்திய அளவில் மூன்றாம் இடம் வகிக்கிறது. அதேபோல் சிறைகளை நிர்வகிக்க நியமிக்கப்படும் ஊழியர்களில் கிட்டத்தட்ட ஐம்பது சதவீத பற்றாக்குறை உள்ளது. உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்டு ஆகிய மாநிலங்களில் 65 சதவீதப் பற்றாக்குறை உள்ளது.

இப்படி அளவுக்கு அதிகமான சிறைக் கைதிகள் நிரம்பி வழிவதாலும் சிறைப் பணியாளர்கள் பற்றாக்குறையாலும் சிறைச்சாலைகளில் குற்றங்கள் பெருகிக் கொண்டே போகின்றன. சிறையிலிருந்து கைதிகள் தப்பிச் செல்லும் சம்பவங்களும் கணிசமாக நடக்கின்றன. சிறை மரணங்களும் அதிகமாக நடக்கின்றன. இந்தியாவில் சராசரியாக தினசரி நான்கு கைதிகள் மரணிக்கிறார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வந்த புள்ளிவிவரம் ஒன்றில், அந்த ஆண்டு 1584 பேர் சிறையில் இறந்ததாகவும், அதில் 1469 பேர் இயற்கை மரணம் என்றும் எஞ்சிய 115 பேர் இயற்கையற்ற மரணம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதில் மூன்றில் இரண்டு தற்கொலையாக இருக்கின்றன. எஞ்சிய ஒன்று கொலையாக இருக்கிறது என்பதுதான் அதிர்ச்சியான செய்தி. சிறைச்சாலைகளில் கஞ்சா, பீடி, சிகரெட், குட்கா, பான் மசாலா முதல் செல்போன் உள்ளிட்ட அதிநவீன கருவிகள் வரை கள்ளத்தனமாகப் புழங்குவதும் இந்தியா முழுதும் வழக்கமாக உள்ளது. அதிகாரிகள், ஊழியர்கள் எவ்வளவு கண்காணிப்போடு இருந்தாலும் சிறைத்துறையிலேயே உள்ள சில கறுப்பு ஆடுகளின் துணையோடும் ஆசீர்வாதத்தோடும் இவையும் அமோகமாய் புழங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. குற்றவாளிகள் போலவே இந்தியச் சிறை அமைப்பையும் திருத்த வேண்டியது காலத்தின் தேவையாய் இருக்கிறது.
                
தொகுப்பு: இளங்கோ கிருஷ்ணன்

Tags : Indian ,prisons , These are not Indian prisons!
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...