×
Saravana Stores

வைபை டெபிட் கார்டுகளை வைத்து ரூ.10 லட்சம் நூதன மோசடி: வாலிபர் கைது

பூந்தமல்லி: போரூர் அடுத்த ஆலப்பாக்கத்தை சேர்ந்த அரி விஸ்வநாத் (28), கடந்த மாதம் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் ஜூலை மாதம் 29ம் தேதி தனது “வைபை” டெபிட் கார்ட்டு தொலைந்து  விட்டதாகவும், அதை பயன்படுத்தி ரூ.15 ஆயிரத்தை மர்ம நபர்கள் எடுத்துள்ளதாகவும் தெரிவித்து இருந்தார்.  இந்த புகார் சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்றப்பட்டது. விசாரணையில், பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் கே.கே. நகரை சேர்ந்த சரவணன் (28) மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய   விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: காட்டுப்பாக்கத்தை சேர்ந்த சரவணன் காதல் திருமணம் செய்துகொண்டு, தனது மனைவி மற்றும் 4 வயது குழந்தையுடன்  வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது. இதற்கு  அதிகளவில் பணம் தேவைப்பட்டதாலும்,  தனக்கு போதிய வருவாய் இல்லாததாலும் நூதன முறையில் பணம் சம்பாதிக்க முடிவு செய்துள்ளார்.  அதன்படி, புதிதாக தொழில் தொடங்கப்போவதாக தனது நண்பரின் பெயரில் ஸ்வைப்பிங் மெஷின் வாங்கி உள்ளார். பின்னர் ஒவ்வொரு ஏடிஎம் மையங்களுக்கும் சென்று வாடிக்கையாளர்கள் மறதியில் விட்டுச் சென்ற வைபை டெபிட்  கார்டுகளை எடுத்து வந்து ஸ்வைப்பிங் மெஷினில் ரகசிய குறியீடு எண் இல்லாமல்  ஒருமுறைக்கு ₹2 ஆயிரம் வீதம் எடுத்துள்ளார்.  

இவ்வாறு ரூ.10 லட்சம் வரை எடுத்துள்ளார். இதை வைத்து குழந்தை சிகிச்சைக்கு பணம் செலுத்தி உள்ளார். இந்த மோசடியில் தொடர்ந்து பணம் கிடைக்கவே, தொடர்ந்து அதை செய்து வந்துள்ளார். இவரிடம் இருந்து 12 வைபை ஏடிஎம் கார்டுகள் மற்றும் ஸ்வைப்பிங் மெஷின் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Tags : Valipar , Rs 10 lakh scam with Wi-Fi debit cards: Valipar arrested
× RELATED வாலிபர் பலி