×

வழிகாட்டு குழு பட்டியலில் ஓபிஎஸ் அணியில் கடைசி நேரத்தில் மாறிய பெயர்களால் திடீர் பரபரப்பு: மகன் தலையீட்டால் நடந்தது என தகவல்

சென்னை: வழிகாட்டு குழு பட்டியலில் ஓபிஎஸ் அணியில் இடம்பெற்றிருந்த சிலரது பெயர்கள் கடைசி நேரத்தில் மாறியது. இது, அவரது மூத்த மகன்  தலையீட்டில் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கடந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில், 38 தொகுதிகளில் அதிமுக கூட்டணி தோல்வியை தழுவியது. தேனி  ெதாகுதியில் மட்டும் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார். இதனால் மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவதற்கான நடவடிக்கைகளை  மேற்கொண்டனர்.
அப்போது, கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்துக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி வேண்டுகோள் விடுத்தார்.  இரு தரப்பிலும் கருத்து மோதல் ஏற்பட்டதால் அதிமுகவுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.இந்நிலையில், கடந்த சில நாட்களாக அதிமுகவில் உள்கட்சி மோதல் வெடித்தது. முதல்வர் எடப்பாடியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும்  நேரடியாக மோதிக் கொண்டனர். அப்போது முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என எடப்பாடி விரும்பினார். ஆனால், வழிகாட்டு  குழு அமைக்கப்பட வேண்டும். குழுதான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும்.  அந்த குழுதான் முழு அதிகாரம் பெற்றதாக இருக்கும் என்றார்.  எனவே, வழிகாட்டு குழு அமைக்க முதல்வர் எடப்பாடி சம்மதித்தார்.

எடப்பாடி அணியில் வழிகாட்டு குழுவில் சேர பலத்த போட்டி இருந்தது. கடைசியாக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன்,  காமராஜ், ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். ஓ.பன்னீர்செல்வம் அணியில், ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் அமைச்சர் மோகன்,  மாணிக்கம், கோபாலகிருஷ்ணன், மனோஜ் பாண்டியன் நியமிக்கப்பட்டனர். ஓ.பன்னீர்செல்வம் அணியில் ஆரம்பத்தில் மனோஜ் பாண்டியனுக்கு பதில்  வைகுண்டம் எம்எல்ஏ சண்முகநாதன், மாணிக்கத்திற்கு பதிலாக பழனி முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம், கோபாலகிருஷ்ணனுக்கு பதிலாக  விருதுநகர் பாலகங்கா இடம்பெற்றிருந்தனர்.அதில், சண்முகநாதன் கடந்த சில நாட்களாக ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து எடப்பாடி பழனிசாமி அணிக்கு சென்று விட்டார். இதனால் அவரது  பெயருக்கு பதில், மனோஜ் பாண்டியனை, கே.பி.முனுசாமி பரிந்துரையின்பேரில் ஓ.பன்னீர்செல்வம் சேர்த்தார். அந்த பட்டியலுடன் பிற்பகல் 3 மணிக்கு  முதல்வர் எடப்பாடியிடம் வழிகாட்டு குழு பட்டியல் அளிக்கப்பட்டது.
 இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன், பல ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு நெருக்கமானவர். இதனால் அவர் பல ஐஏஎஸ்  அதிகாரிகள் மூலம் ரவீந்திரநாத்திடம், தனது பெயரை வழிகாட்டு குழுவில் சேர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அதேபோல, மாணிக்கமும் ரவீந்திரநாத்திடம் கோரிக்கை விடுத்தார்.இதனால் பாலகங்கா, சுப்புரத்தினம் ஆகியோருக்கு பதில், கோபாலகிருஷ்ணன்,  மாணிக்கம் ஆகியோரது பெயர்களை ரவீந்திரநாத் சேர்த்தார். பின்னர் நள்ளிரவில்தான் ஓ.பன்னீர்செல்வம் அணியில் புதிய பெயர்கள் சேர்க்கப்பட்ட  பட்டியல் தயாரிக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டது. இந்த தகவல் தற்போது வெளியாகி ஓ.பன்னீர்செல்வம் அணியில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலகங்கா, சுப்புரத்தினம் ஆகியோருக்கு பதில், கோபாலகிருஷ்ணன், மாணிக்கம் ஆகியோரது பெயர்களை ரவீந்திரநாத் சேர்த்தார்.



Tags : OPS team ,son intervention , In the steering committee list Last time on the OPS team Sudden agitation by changed names: happened by son intervention As informed
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்...