×

விவசாயிகளை தீவிரவாதி என்று விமர்சித்த நடிகை கங்கனா ரனாவத் மீது வழக்குப்பதிவு!!

டெல்லி : விவசாயிகளை தனது ட்விட்டரில் தீவிரவாதி என்று விமர்சித்த நடிகை கங்கனா ரனாவத் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு தும்கூர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வேளாண் சட்ட மசோதாவை இரு அவைகளிலும் நிறைவேற்றி, ஜனாதிபதி ஒப்புதலுடன் சட்டமாக நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதா விவசாயிகளுக்கு எதிரானது என்று விவசாயிகள், எதிர்க்கட்சியினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்தியவர்களை பயங்கரவாதிகள் என்று கங்கனா ரனாவத் குற்றம்சாட்டியிருந்தார்.

நடிகை கங்கனா ரனாவத் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

பிரதமர் அவர்களே, “தூங்குபவர்களை எழுப்பி விடலாம்; தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது” என்று பழமொழி உண்டு. அதேபோல, ஒரு விஷயத்தை தவறாக புரிந்து கொண்டவர்களுக்கு விளக்கமளிப்பதன் மூலம் அவர்களின் எண்ணத்தை மாற்றிவிட முடியும். ஆனால், அனைத்தும் தெரிந்திருந்தும் வேண்டுமென்றே போராடுபவர்களை நம்மால் மாற்ற முடியாது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் எந்தக் குடிமகனும் வெளியேற்றப்படாத நிலையில், அச்சட்டத்துக்கு எதிராக வன்முறை வெறியாட்டங்களில் தீவிரவாதிகள் ஈடுபட்டனர். அந்த தீவிரவாதிகள்தான் தற்போது வேளாண் மசோதாக்களுக்கு எதிராக போராடி வருகின்றனர். இவ்வாறு அதில் கங்கனா கூறியுள்ளார்.

இதை எதிர்த்து கர்நாடக மாநிலத்தில் வழக்கறிஞர் ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த கோர்ட் கங்கனா ரனாவத் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. விவசாயிகளின் மனதை புண்படுத்தும் வகையிலும், இளைஞர்களின் மனதில் வன்முறையை தூண்டும் வகையிலும் அவரது பதிவு இருந்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

Tags : Kangana Ranaut ,extremists , Farmer, Terrorist, Actress, Kangana Ranaut, Case
× RELATED மும்பையில் பாலிவுட் நடிகை கங்கனா...