×

நாங்கள் அப்பாவி; எதுவும் தெரியாது: ஹத்ராஸ் இளம்பெண்ணை அவரின் தாயும், அண்ணனும்தான் தாக்கினர்: மாவட்ட எஸ்பி.க்கு கைதான வாலிபர் பரபரப்பு கடிதம்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் பலாத்கார சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் எஸ்பி.க்கு எழுதிய கடிதம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராசில் 19 வயது தாழ்த்தப்பட்ட இளம்பெண் 4 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். கரும்பு தோட்டத்தில் ஆபத்தான நிலையில் கிடந்த அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சந்தீப் என்ற வாலிபர்,  மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கு (எஸ்பி) கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

இந்த கடிதத்தில், ‘நான் அப்பாவி, எனக்கு ஒன்றும் தெரியாது. அதேபோல், மற்ற மூன்று பேருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பில்லை. வழக்கு தொடர்பாக நியாயமான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். நானும், இளம்பெண்ணும் பல நாட்களாக நண்பர்களாக இருக்கிறோம். நாங்கள் இருவரும் சந்தித்து பேசுவது வழக்கம். ஆனால், எங்கள் நட்பு இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. செப்டம்பர் 14ம் தேதி நானும் இளம்பெண்ணும் வயலில் சந்தித்தோம். பின்னர், நான் வீட்டிற்கு வந்துவிட்டேன். அதன் பிறகுதான் இளம்பெண்ணை அவரது அம்மாவும், சகோதரரும் அடித்துள்ளது எனக்கு தெரிய வந்தது. அவர்கள் இருவரும்தான் இளம்பெண்ணை கடுமையாக அடித்து, உதைத்து தாக்கியுள்ளனர்,’ என்று கூறியுள்ளார்.

கடந்த 7ம் தேதியிடப்பட்ட இந்த கடிதத்தில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரும் கைநாட்டை பதிவிட்டுள்ளனர். இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இது தொடர்பாக ஹத்ராஸ் எஸ்பி.யிடம் கேட்டபோது, ‘‘இந்த கடிதம் இதுவரை நேரடியாக எனக்கு கிடைக்கப்பெறவில்லை. சமூக வலைதளம் மூலமாக தான் இந்த கடிதம் கிடைத்தது. சிறையில் இருக்கும் அவர்களை பார்ப்பதற்காக சென்ற குடும்ப உறுப்பினர்கள் மூலமாக, இந்த கடிதம் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு இருக்கலாம் அல்லது அலிகர் சிறை அதிகாரி மூலமாக பதிவிடப்பட்டு இருக்கலாம். எனக்கு உண்மை நகல் கிடைத்தால் மட்டும்தான் அது குறித்து பதிலளிக்க முடியும்,” என்றார்.


உபி. சிறைகளில் இன்ஜினியர், பட்டதாரி கைதிகள் அதிகம்
கடந்தாண்டு நிலவரப்படி நாடு முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிகம் படித்த கைதிகளின் விவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது.
* நாடு முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளில் உள்ள 3,740 கைதிகள் தொழில்நுட்ப பட்டப்படிப்பு முடித்தவர்கள்.
* இவர்களில் 727 பேர் அல்லது 20 சதவீதம் பேர் உத்தரப் பிரதேச சிறைகளில் உள்ளனர். மகாராஷ்டிராவில் 495 பேரும், கர்நாடகாவில் 362 கைதிகளும் தொழில்நுட்ப பட்டம் பெற்றவர்கள்.
* இது மட்டுமின்றி, உத்தரப் பிரதேச சிறை கைதிகளில் பெரும்பாலானோர் முதுகலை பட்டம் பெற்றவர்கள்.
* நாடு முழுவதும் உள்ள சிறைகளில் முதுகலை பட்டப்படிப்பு முடித்த 5,282 கைதிகள் உள்ளனர். இதில், 2010 பேர் உத்தரப் பிரதேச சிறைகளில் உள்ளனர்.
* இந்த படித்த கைதிகள் அனைவரும் பெரும்பாலும் வரதட்சணை கொடுமையால் மனைவி இறந்தது, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட குற்றங்களுக்காக தண்டனை பெற்றுள்ளனர். சிலர் பொருளாதார குற்றங்களுக்காக தண்டனை பெற்றுள்ளனர்.
* இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 3 லட்சத்து 30 ஆயிரத்து 487 கைதிகளில், 1.67 சதவீதம் பேர் முதுகலை பட்டதாரிகள், 1.2 சதவீதம் பேர் இன்ஜினியர்கள்.

Tags : SP ,brother , Hathras, teenager
× RELATED ராமநாதபுரத்தில் கலவரம் தடுப்பு குறித்து ‘மாப் ஆபரேஷன்’