சூனியம் வைத்து கொல்வதாக மிரட்டியதால் பெண்கள் திடீர் மறியல் போராட்டம்: போலி பெண் சாமியார் எஸ்கேப்

கூடுவாஞ்சேரி: வண்டலூர் அருகே மேலக்கோட்டையூர் ஊராட்சி ராஜீவ் காந்தி நகரில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு, சுமதி என்பவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, அதில் வீடு கட்டினார். மேலும், அங்குள்ள மரத்தடியில் குறிமேடை அமைத்து, பொதுமக்களுக்கு குறி சொல்லும் தொழில் செய்தார். இந்நிலையில் சுமதி, அப்பகுதியில் போலீஸ் குடியிருப்பு அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து, மேலும் ஒரு குறிமேடை அமைக்க முயற்சித்தார். இதையறிந்த அப்பகுதி மகளிர் சுயஉதவி குழுவினர் நேற்று காலை அங்கு சென்று, குறிமேடை அமைத்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், வருவாய் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால், யாரும் வரவில்லை. இதையடுத்து பெண்கள், ராஜீவ் காந்தி நகர் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து தாழம்பூர் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் சமரசம் பேசினார். அப்போது அவர்கள், கேரளாவை சேர்ந்த சுமதி, இங்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் குறிமேடை அமைத்து குறி சொல்லி வந்தார். அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட நாட்களில், பேய் விரட்டுவதாகவும், பில்லி, சூனியம் எடுப்பதாகவும் கூறி ₹5 ஆயிரம் முதல் ₹50 ஆயிரம் வரை வசூலிக்கிறார்.

இதில், குணமடையாதர்கள் பணத்தை திருப்பி கேட்டால், சூனியம் வைத்து கொல்வேன் என்று மிரட்டுகிறார். இதுபோல் அனுமந்தபுரம், ஊரப்பாக்கம், ரத்தினமங்கலம், கொளப்பாக்கம், பெருங்களத்தூர், தாம்பரம், மேலக்கோட்டையூர், நெல்லிகுப்பம் ரோடு, புதுச்சேரி உள்பட 10 இடங்களில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, குறிமேடை அமைத்துள்ளார். தற்போது, 11வது இடமாக போலீஸ் குடியிருப்பு அருகே உள்ள ராஜீவ் காந்தி நகரில் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, கான்கிரீட் அமைக்கிறார். இதை பொதுமக்கள் தட்டி கேட்டதற்கு, அடியாட்களை வைத்து கொலை செய்து விடுவதாகவும், பில்லி, சூனியம், மந்திரம் வைத்து அனைவரையும் கொன்று விடுவதாகவும் மிரட்டுகிறார்.

போலி பெண் சாமியார், ஆக்கிரமித்து கட்டியுள்ள குறிமேடைகளை உடனடியாக அகற்ற வேண்டும். அவர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். வருவாய்த்துறை மற்றும் போலீசார், பெண் சாமியார் சுமதி மீது, உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், மேலக்கோட்டையூர் ஊராட்சியில் 3 மணிநேரம் பெரும் பரபரப்பு நிலவியது.

Related Stories: