சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிடக்கோரிய வழக்குகள் தள்ளிவைப்பு: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிடக் கோரி திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார், மீனவர் அமைப்பைச் சேர்ந்த தியாகராஜன் ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகள், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான வக்கீல், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை 22 மொழிகளிலும் வெளியிட வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த வழக்கு வரும் 23ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும், கர்நாடக உயர் நீதிமன்றம் வரைவு அறிக்கைக்கு விதித்த தடையை நீட்டித்து உள்ளது.

அதுமட்டுமல்லாமல் தேதி குறிப்பிடாமல் வழக்கை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. எனவே, இந்த வழக்குகளையும் தள்ளிவைக்க வேண்டும். இதே கோரிக்கையுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேலும் இரு வழக்குகளையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று கோரினார். இதை ஏற்று, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேலும் இரு வழக்குகளையும், இந்த வழக்குகளுடன் சேர்த்து விசாரணைக்கு உத்தரவிட்ட தலைமை நீதிபதி அமர்வு இந்த வழக்குகளின் விசாரணையை 6 வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டது.

Related Stories:

>