×

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே சிவகுமார் வீடு, அலுவலகம் உட்பட 14 இடங்களில் சிபிஐ திடீர் ரெய்டு: ரூ.57 லட்சம் பணம் மற்றும் சொத்து ஆவணம் பறிமுதல்

பெங்களூரு: கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பு வகித்து வருபவர் டி.கே சிவகுமார். இவர் தலைமையில் முதன் முதலாக ராஜராஜேஸ்வரி நகர், ஷிரா தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாராகி வருகிறது. இந்நிலையில், நேற்று காலை 5.30 மணியளவில் பெங்களூரு சி.பி.ஐ எஸ்.பி தாம்சன் ஜோஸ் தலைமையிலான 8 அதிகாரிகள், டி.கே சிவகுமாரின் சதாசிவாநகர் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது ரூ.57 லட்சம் ரொக்கம், பெட்டிரைவ், செல்போன் ஜார்ஜ் மற்றும் சொத்து ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். இதேபோன்று, ராம்நகர், கனக்கபுரா, தொட்டகாலஹள்ளி, ஹாசன், கனக்கபுரா கோடிஹள்ளியில் உள்ள சகோதரர் டி.கே சுரேஷின் வீடு, அலுவலகம் உள்பட மாநிலத்தில் 9 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

இதேபோன்று டெல்லியில் உள்ள சிவகுமார், டி.கே சுரேஷின் வீடு அலுவலகம் உள்பட 4 இடங்கள், மும்பையில் ஒரு இடத்தில் சி.பி.ஐ சோதனை நடத்தினர். ஒரே நேரத்தில் 60க்கும் அதிகமான அதிகாரிகள் 14 இடங்களில் நடந்த இந்த சோதனை மாலை 7 மணிக்குதான் முடிந்தது. சுமார் 12 மணி நேரம் சோதனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சோதனை குறித்து தகவல் கிடைத்ததும், காங்கிரஸ் பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் பெங்களூரு, ராம்நகர், கனக்கபுரா, ஹாசன், மங்க்ளுரு உள்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹாசன், மங்களூருவில் டயர்களை எரித்தும், சாலைகளை மறித்தும் போராட்டம் நடத்தினர். இந்த ரெய்டு விவகாரம் கர்நாடகா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* விரைவில் கைதா?
சோதனை குறித்து சி.பி.ஐ தரப்பில், ‘‘2019ம் ஆண்டு நடந்த சோதனையில் சிக்கிய ஆவணங்களில் டி.கே சிவகுமாருக்கு ரூ.75 கோடி சொத்துகள் கணக்கில் வரவில்லை. சட்டவிரோத பண பரிமாற்றம் மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர். அதை கடந்த மார்ச் மாதம் சி.பி.ஐ பரிசீலனை செய்து, அந்த ஆவணங்களை அடிப்படையில் சோதனை நடத்தியுள்ளது’’ என கூறப்பட்டுள்ளது. இதனால் எந்நேரத்திலும் டி.கே சிவகுமார் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

Tags : raids ,places ,DK Sivakumar ,CBI ,Karnataka ,house ,Congress , CBI raids 14 places including Karnataka Congress leader DK Sivakumar's house and office: Rs 57 lakh cash and property documents seized
× RELATED தங்கக்கடத்தல் தொடர்பாக கேரளாவில் 5...