×

ஹத்ராஸ் பலாத்கார விவகாரம் சர்வதேச சதி உள்ளிட்ட 19 பிரிவில் வழக்கு: உபி போலீசார் நடவடிக்கை

ஹத்ராஸ்: ஹத்ராசில் 19 வயது தலித் சமூகத்தை சேர்ந்த இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த விவகாரத்தை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை நிகழ்வில் சர்வதேச சதி இருப்பது உள்ளிட்ட 19 பிரிவுகளின் கீழ் உத்தரப்பிரதேச மாநில போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராசில் தலித் சமூகத்தை சேர்ந்த இளம்பெண் கும்பலால் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்தார். இந்த கொடூர சம்பவம் மாநிலம் முழுவதும் பதற்றத்தையும் போராட்டங்களையும் ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு தலைவர்களும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் பாதுகாப்பு கருதி உயிரிழந்த இளம்பெண் குடும்பத்தினருக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இளம்பெண் பாலியல் பலாத்காரத்துக்கு எதிராக போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று முன்தினம் இரவு போலீசார் இது தொடர்பாக மாநிலம் முழுவதும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது 19 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். போராட்டங்கள் மூலம் மாநிலத்தில் பெரும் சதி திட்டம் அரங்கேற்றப்படுவதாக சந்த்பா காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில், தேசத்துரோகம், சர்வதேச சதி, அரசு அல்லது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், வெவ்வேறு பிரிவினருக்கு இடையே பகையை ஏற்படுத்துதால் உள்பட 19 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* ஆம் ஆத்மி எம்பி மீது மை வீச்சு
இதற்கிடையே, ஹத்ராசில் இருக்கும் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் தலைமையிலான பிரதிநிதிகள் குழு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திப்பதற்காக கிராமத்திற்கு சென்றனர். அப்போது எம்பி சஞ்சய் சிங் ஊடகத்தினருக்கு பேட்டி அளித்துக்கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் எம்பி மீது மை வீசினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட நபரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த குழுவினர் இன்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்திக்க உள்ளனர்.

* ஓய்வு நீதிபதி தலைமையில் சிறப்பு குழு?
இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிந்துரைத்த நிலையில் தற்போது உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில்,”ஹத்ராஸ் விவகாரத்தை உச்ச நீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றத்தின் ஓய்வு நீதிபதி தலைமையிலான சிறப்பு குழு கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும். அப்போது தான் இதில் நடந்த உண்மை என்னெவென்று வெளிப்படையாக தெரியவரும்’’ என கூறப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதையடுத்து இந்த விவகாரத்தில் சிறப்பு குழு அமைக்கப்படுமா என்பது தெரியவரும்.

Tags : police action , Hadras rape case case under 19 section including international conspiracy: UP police action
× RELATED சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு...