×

கொரோனா திருமணங்கள்!

நன்றி குங்குமம்


இந்தியாவைப் பொறுத்தவரையில் திருமணம் என்பது சமூக, கலாசார ரீதியாக மிக முக்கியமானதொரு நிகழ்வு. இந்தியர்களின் வாழ்வில் எதிர்கொள்ளும் செலவுமிக்க நிகழ்வும் இதுதான். நாளுக்கு நாள் திருமணங்கள் செலவுமிக்கதாக மாறிக்கொண்டிருந்த சூழலில், கொரோனா ஊரடங்கு காலம் அதன் நடைமுறைகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மார்ச் மாத இறுதிக்குப் பிறகு திருமணத்தை நடத்த திட்டமிட்டவர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். மண்டபத்தை பதிவு செய்தது முதல் சாப்பாடு, புத்தாடைகள், வாகன ஏற்பாடுகள் என அனைத்துவிதமான ஏற்பாடுகளும் நின்றுபோயின. திருமண சந்தையைப் புரட்டிப் போட்டுள்ளது இந்தப் பெருந்தொற்று. பலர் திருமணத்தை பிறகு நடத்திக் கொள்ளலாம் என்று ரத்து செய்தனர். சிலர் குறித்த தேதியில் திருமணத்தை எளிமையாக நடத்தி முடித்தனர். ஆயிரம் பேர் கூடும் திருமணங்கள் பத்து பேருக்கும் குறைவானவர்கள் முன்னிலையில் நடைபெற்றன. மண்டபச் செலவு, உணவுச் செலவு, புகைப்படச் செலவு என எதுவுமில்லை. லட்சங்களில் திட்டமிட்டிருந்த திருமணச் செலவு ஆயிரங்களில் சுருங்கியது. இப்போது ஸ்கைப், வாட்ஸ்அப்  மூலமாகவே திருமணங்கள் நடைபெறுகின்றன. இப்படி கொரோனா காலத்தில் திருமணம் செய்த சில தம்பதிகளைப் பிடித்தோம்.


எம்பி, எம்எல்ஏ கலந்துகொள்ளாத உயர்நீதிமன்ற திருமணம்!

கரூர் மாவட்டம், சித்தலவாய் பகுதியைச் சேர்ந்தவர் உமேஷ்வரன். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கிறார். இவருக்கும் சாமப்பட்டி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் மகள் திவ்யாவுக்கும் திருமணம் ஏற்பாடானது. ‘‘கரூரில் பிரபல மண்டபத்தில் திருமணம் நடத்த முடிவு செய்து 3,000 பத்திரிகைகள் அச்சடித்தோம். திருமணத்தை படுபிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்தோம். திருநாவுக்கரசர், செல்வக்குமார், ஜோதிமணி போன்ற எம்பி-க்களும் செந்தில் பாலாஜி, குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் ராமர், கே.என்.நேரு உள்ளிட்ட எம்எல்ஏ-க்களும், இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதி களும் கலந்துகொள்ள இருந்தார்கள். ஆனால், உலகையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் நம் ஊரையும் ஆட்டுவிக்க, எல்லாமே மாறிப்போனது. இந்த நேரத்தில் கூட்டம் கூட்டுவது நல்லதல்ல. அதனால் எனது திருமணத்தை எளிமையாக நடத்த முடிவு செய்தோம். திவ்யாவோட கிராமத்துல உள்ள பெருமாள் கோயில்ல சுகாதாரப் பாதுகாப்போடு குறுகிய நேரத்தில் திருமணத்தை நடத்தி முடிச்சுட்டோம். இரண்டு தரப்பிலும் சேர்த்து 12 பேர் மட்டுமே கலந்துகொண்டார்கள்...’’ என்கிறார் உமேஷ்வரன்.

இரு மாநில எல்லையில் கல்யாணம்

கேரள - தமிழக எல்லையில் நடு வீதியில் நடந்த திருமண வைபவம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஹிட். கொரோனா பரவலைத் தடுப்பதற்கான எல்லைக் கட்டுப்பாடுகளே இதற்குக் காரணம். கோவை மாவட்டம் சரவணம்பட்டியைச் சேர்ந்த ராபின்சனுக்கும் கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த பிரியங்காவுக்கும் மார்ச் 22ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா காரணமாக இரு மாநிலங்களிலும் கடுமையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அன்றைய தினம் திருமணம் நடைபெறவில்லை. அதன்பின்  ஜூன் 7ம் தேதி திருமணம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. இதற்காக மணமக்கள் இருவரும் தனித்தனியே இடுக்கி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஆன்லைனில் இ-பாஸ் விண்ணப்பித்தனர். இ-பாஸ் கிடைப்பதில் இருவருக்குமே இழுபறியாகவே இருந்தது.தவிர, குடும்பத்தினர் அனைவரும் பாஸ் பெற்று, எல்லை கடந்து சென்றால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டிய நிலை. இதனால் தமிழக - கேரள எல்லையில் இடைவெளியுடன் திருமணத்தை முடிக்க இருவரின் குடும்பத்தினரும் தீர்மானித்தனர். அதன்படி தமிழக - கேரள எல்லையிலுள்ள சின்னார் சோதனைச்சாவடி அலுவலகத்துக்கு முன்னால் உள்ள வீதியில் பாய் விரித்து, தார் சாலை திருமண மேடையாக்கப்பட்டது. தமிழ்நாடு பக்கமிருந்து மணமகனும் கேரள பக்கமிருந்து மணமகளும் எல்லைப் பகுதியை நோக்கி வந்தனர். பிறகு இருவரும் மாலை மாற்றி, தாலிகட்டி திருமணம் செய்துகொண்டனர். மாப்பிள்ளை வீட்டுச் சொந்தம் தமிழக எல்லையில் நின்று ஆசீர்வதித்தனர், கேரள எல்லையில் இருந்து மணமகள் உறவினர்கள் ஆசீர்வதித்தனர். இத்திருமணத்தின்போது வன இலாகா அதிகாரிகளும் இரு மாநில காவலர்களும் உடனிருந்தனர். மணமக்களும், திருமண வைபவத்தில் கலந்து கொண்ட குடும்பத்தினரும் முகக்கவசம் அணிந்திருந்தனர். மணமக்கள் மாற்றிக்கொண்ட மாலைகள் உட்பட திருமண வைபவத்தில் பயன்படுத்தப்பட்ட அனைத்தும் சானிடைசர் மூலம் கிருமிநீக்கம் செய்யப்பட்டன.

தம்பிக்கு லவ் மேரேஜ்...எனக்கு கொரோனா கால மேரேஜ்!

‘‘என் தம்பி விஜய் காதல் திருமணம் செய்ததால் எனக்கு ரொம்ப நாளா பொண்ணு தேட வேண்டிய சூழல். ஒரு வழியா என்னோட திருமணம் முடிவானது. கல்யாணத்தை எல்லாருக்கும் சொல்லி பெரிய அளவுல செய்யலாம்னு முடிவு செய்திருந்தோம். இறுதியில 30 பேர் மட்டும் கலந்துகிட்டு எளிமையாக நடத்துனதுல வருத்தம்தான். எங்க குடும்பத்துல சின்ன தாத்தா, தாய் வழி பாட்டிங்கன்னு வயசானவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்க முன்னிலையில், ஆசீர்வாதத்துடன் என் கல்யாணத்தை நடத்தணும்னு ஆசைப்பட்டேன். அவங்க யாரும் வர முடியல. வரணும்னு ஆசைப்பட்ட சிலரையும் வேண்டாம்னு சொல்லிட்டோம். கொரோனோ உச்சத்துல இருந்த சமயம் அது...’’ என்கிறார் புது மாப்பிள்ளை விமல் ராஜ். அவரது மனைவி  இந்துமதி தொடர்ந்தார்: ‘‘எனக்கு தஞ்சாவூர். அங்க இருந்து பெரம்பலூர் வர்றதுக்கு பாஸ் கிடைக்கலை. என் தோழிகள் பல பேர் திருமணத்துக்கு வர்றதா இருந்தாங்க. அவங்களையும் கூப்பிட்டு சந்தோஷமா நடத்த முடியலை. எங்க சமூக திருமணத்தில் சடங்குகள் அதிகம். மாப்பிள்ளை கோவித்துக்கொண்டு போவார். நண்பர்கள் அவரை சமாதானப்படுத்தி அழைத்து வரும் நிகழ்வு எல்லாம் நடக்கும். மாமன்முறை உறவினர்கள், நண்பர்கள் இல்லாததும், ஏதோ சம்பிரதாயம் போல நிகழ்ந்தேறியதும் வருத்தம். இருந்தாலும் கொரோனா ஒழிய வேண்டும் என்பதில் நாங்களும் பங்கு பெற்றோம் என்பது மகிழ்ச்சியாக இருந்தது. குறைவானவர்களே கலந்து கொண்டிருந்தாலும் தூய்மை சார்ந்த அனைத்தும் கடைப்பிடித்தோம், வந்தவர்களுக்கு மாஸ்க், கை உறை கொடுத்தோம்...’’ என்றார் இந்துமதி.

எங்க வீட்டு கடைசி திருமணம் இப்படி எளிமையா நடக்கும்னு எதிர்பார்க்கலை!

‘‘எங்க வீட்டின் கடைசி திருமணம் இது. அதனாலே எல்லா சொந்தங்களையும் அழைச்சு சிறப்பா நடத்தணும்னு ஆசை. நான்கு முறை தேதி குறித்து தள்ளிப்போய்க்கிட்டே இருந்தது. கொரோனா சமயத்தில் ரொம்பவே நொந்துட்டோம். ஊரடங்கும் நிற்காமல் தொடர்ந்துகிட்டே இருந்தது. வேற வழியில்லாமல் கல்யாணத்தை எளிமையாக நடத்தலாம்னு ஒரு மனதாக முடிவு செய்தோம். சொந்த பந்தங்கள், மாமன் முறை உறவினர்களுக்கு இதனால எங்க மேல வருத்தம். ஆனால், கொரோனா காலத்துல எளிமையாக திருமணம் செய்தது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கு. ஆடம்பரச் செலவுகள் இல்லை. நான் தூத்துக்குடி மாவட்டம். அவங்க நெல்லை மாவட்டம். காவலர்கள்கிட்ட அனுமதி வாங்கி, முறையாக கோயிலில் வைத்து அனைத்து வித தூய்மை நடவடிக்கையுடன் திருமணத்தை நடத்தினோம்...’’ என்கிறார் வெங்கடேஷ்வரன். இவரது மனைவி பெயர் சிவகாமி.

பல்வால் தேவனின் திருமணம்

‘பாகுபலி’ படத்தில் வில்லன் பல்வால் தேவனின் மனைவி யார் என்பது  படு சஸ்பென்ஸாகவே இருக்கும். அதேபோலதான் நிஜ வாழ்க்கையிலும்.
எஸ். பல்வால் தேவனாக நடித்த ராணா டகுபதியின் திருமணம் கூட கொரோனா லாக்டவுனில்தான் நடந்துள்ளது. வெறும் 30 பேர் மட்டுமே கலந்துகொள்ள, மிக எளிமையாக தனது காதலி மிஹீகாவைக் கரம் பிடித்தார் ராணா. ஆடைவடிமைப்பு கலை படித்தவர் மிஹீகா. ஹைதராபாத்தில் சிறிய நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றார். ஹைதராபாத்தில் நடந்த இந்த திருமணத்தில் இரு வீட்டாரின் உறுப்பினர்களும், மிக நெருங்கிய நண்பர்களும், ராம்சரண், நாக சைதன்யா, சமந்தா ஆகிய பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

தொகுப்பு: திலீபன் புகழ்

Tags : Corona Weddings , Corona Weddings!
× RELATED சோதனை சாவடியில் நடைபெற்ற கொரோனா...