×

ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பாலியல் கொடுமை: அடியாட்களுடன் தாக்கிய மேலாளர் உடந்தையாக செயல்படும் போலீசார்

மதுரை: தனியார் நிறுவன மேலாளரின் பாலியல் தொல்லைக்கு உடந்தையாக இருந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறி, இளம்பெண் தோழியுடன் வந்து மதுரை கலெக்டரிடம் புகார் மனு அளித்தார். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் மகள் சங்கீதா (23). இவர் நேற்று தனது தோழி முனிதாவுடன், மதுரை கலெக்டர் அலுவலகம் வந்து, கலெக்டர் வினயிடம் மனு கொடுத்தார். மனுவில் கூறியிருப்பதாவது:

பெற்றோர் என்னை தனியாக விட்டு விட்டு, இருவரும் மறுதிருமணம் செய்து கொண்டனர். நான் பாட்டி தனலட்சுமி பராமரிப்பில் வளர்ந்தேன். பள்ளிப்படிப்பை திருப்பரங்குன்றத்தில் முடித்த நிலையில் வேலை தேடினேன். அப்போது, எனது தோழி மூலம், பல்லடத்தில் ஆடை உற்பத்தி தொழிற்சாலையில் வேலை கிடைத்தது. அங்கேயே தங்கி வேலை செய்துகொண்டு, தொலைதூர கல்வியில் பிஏ ஆங்கிலம் படித்தேன்.

கம்பெனி மேலாளர் சிவக்குமார் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். எனது புகைப்படங்களை மார்பிங் செய்து என்னை மிரட்டி ஆபாச வார்த்தைகள் பேசினார். நான் சொல்லும் இடத்திற்கு வந்தால், படத்தை தருவதாகவும், இல்லாவிட்டால் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றுவேன் என மிரட்டினார். தோழி முனிதாவுடன், எங்களை பாதுகாத்துக்கொள்ள மிளகாய்பொடி, கயிறு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அவர் கூறிய இடத்திற்கு சென்றோம். அப்போது மேலாளர் என்னிடம் தகாத முறையில் நடந்ததால் சண்டை வந்தது, அவர் மீது மிளகாய் பொடியை தூவி, கயிறால் கட்டிப்போட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தோம். போலீசார் எங்களிடம் விசாரணை நடத்தினர்.

இன்ஸ்பெக்டர் கோமதி எங்களை அவமரியாதையாக திட்டினார். எஸ்ஐ செந்தில்பிரபு பொய் புகார் எழுதி, எங்களை மிரட்டி வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கினார். பின்னர் எங்களை மாஜிஸ்திரேட் முன்பு நிறுத்தினர். ‘நீதிபதி எது கேட்டாலும் தலையை மட்டும் ஆட்ட வேண்டும். எதிர்த்து பேசக்கூடாது’ என போலீசார் மிரட்டினர். பின்னர், நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். எனது தோழிக்கு கொரோனா இருந்ததால் ஜாமீனில் வெளியே வந்தோம்.

பல்லடம் காவல்நிலையத்தில் கையெழுத்து போடும்போது, மேலாளர் சிவக்குமார் தனது அடியாட்களுடன் வந்து எங்களை அடித்து, காவல்நிலையம் செல்லாதவாறு துன்புறுத்தினர். நாங்கள் தங்கியிருந்த வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தினர். எங்களை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கி, போலீஸ் மூலம் கொடுமை செய்த மேலாளர் மற்றும் உடந்தையாக செயல்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்திருந்தனர்.
இதுதொடர்பாக திருப்பூர் கலெக்டரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை பாதுகாப்பாக இருக்கும்படி கலெக்டர் வினய் அறிவுறுத்தியுள்ளார்.

Tags : Sexual harassment ,clothing company ,slaves ,assault , Sexual harassment, police complicity
× RELATED தமிழக அரசின் மீது சுமை கூடுவதை...