×

இ-பாஸ் குழப்பத்தால் சென்னையில் விமான பயணிகள் வருகை சரிவு

சென்னை: சென்னை உள்நாட்டு  விமான நிலையத்தில் அதிகரித்து வந்த பயணிகளின் எண்ணிக்கை நேற்று திடீரென பெருமளவு குறைந்தது. விமான நிலையத்தில் இ-பாஸ் கவுன்டர்களில் ஏற்பட்ட குழப்பமே காரணம் என்று கூறப்படுகிறது.  சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில்  இயக்கப்படும் விமானங்களில் படிப்படியாக விமானங்களின் எண்ணிக்கையும் பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தன. கடந்த திங்கள்கிழமை 128 விமானங்கள் இயக்கப்பட்டு 13 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். நேற்று 121 உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டன. அதில் சுமார் 8 ஆயிரம் பேரே பயணிக்க முன்பதிவு செய்துள்ளனர். குறிப்பாக ஐதராபாத்திலிருந்து காலை 7.30 மணிக்கு சென்னை வரும் ஏர் இந்தியா விமானத்தில் நேற்று இரவு வரை ஒருவர் கூட முன்பதிவு செய்யவில்லை. எனினும் காலை 6 பேருடன் விமானம் சென்னை வந்தது.

அதேபோல பல விமானங்களிலும் குறைந்தளவு பயணிகளே முன்பதிவு செய்திருந்தனர். எனவே, சென்னை உள்நாட்டு முனையத்தில் அதிகரித்து வந்த பயணிகளின் எண்ணிக்கை திடீரென ஒரே நாளில் சுமார் 5 ஆயிரம் பேர் வரை குறைந்ததற்கு  அதிகாரிகள் குளறுபடிதான் காரணம் என விமானப் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து விமானநிலைய அதிகாரிகளிடம் கேட்டதற்கு, பயணிகள் எண்ணிக்கை கூடுவதும் குறைவதும் வழக்கமானது தான் என்று கூறுகின்றனர். ஆனால் பயணிகள் தரப்பிலோ, சென்னை விமான நிலையத்தில் நடந்த இ-பாஸ் குளறுபடிகள்தான் காரணம் என்று கூறுகின்றனர். எனினும் தற்போது இ-பாஸ் கவுன்டர்கள் மீண்டும் செயல்பட தொடங்கிவிட்டதால், மீண்டும் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வருகை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.



Tags : Air passenger arrivals ,Chennai , Air passenger arrivals decline in Chennai due to e-pass confusion
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...