×

ஊராட்சி நிர்வாகத்தில் தகவல் தொழில்நுட்பம்: தேசிய அளவில் தமிழகத்துக்கு 2வது இடம்...முதல்வரை சந்தித்து வாழ்த்து

சென்னை : ஊராட்சி நிர்வாகத்தில் தகவல் தொழில்நுட்பத்தை செயல்படுத்தியதற்காக தேசிய அளவில் தமிழகத்துக்கு 2வது இடம் கிடைத்துள்ளது. ஊராட்சி அமைப்புகளின் சிறந்த முயற்சிகள் மற்றும் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசின் ஊராட்சி அமைச்சகம் ஆண்டுதோறும் பல்வேறு இனங்களின்  கீழ், மாவட்ட ஊராட்சி, வட்டார ஊராட்சி மற்றும் கிராம ஊராட்சி ஆகிய மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகளுக்கு ஊக்கத் தொகையுடன் கூடிய விருதுகளை வழங்கி கௌரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் 2018-19ம் ஆண்டிற்கான தீன் தயாள் உபாத்யாய ஊராட்சிகளை வலிமைப்படுத்தும் விருதுகளின் கீழ், சிறந்த மாவட்ட ஊராட்சி விருது- தர்மபுரி மாவட்டத்திற்கும், சிறந்த வட்டார ஊராட்சி விருதுகள்-சேலம்  மாவட்டம்,

கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மதுரை மாவட்டம், திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கும், சிறந்த கிராம ஊராட்சி விருதுகள்-கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் (கிழக்கு) கிராம ஊராட்சி,  ஈரோடு மாவட்டம், குருமந்தூர் கிராம ஊராட்சி, புதுக்கோட்டை மாவட்டம், அம்புகோவில் கிராம ஊராட்சி,  கிருஷ்ணகிரி மாவட்டம், நெடுங்கல் கிராம ஊராட்சி, கோயம்புத்தூர் மாவட்டம், இக்கரை பொழுவாம்பட்டி கிராம ஊராட்சி, காஞ்சிபுரம்  மாவட்டம், மேவளூர்குப்பம் கிராம ஊராட்சி ஆகிய ஆறு கிராம ஊராட்சிகளுக்கும் வழங்கப்பட்டது.  
 
ஊரகப் பகுதி மக்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கான திட்டங்களை வலுவான கிராம சபையின் பங்களிப்புடன் செயல்படுத்தியமைக்கான நானாஜி தேஷ்முக் ராஷ்டிரிய கௌரவ கிராம சபை விருது கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த களவனூர் கிராம ஊராட்சிக்கு வழங்கப்பட்டது.  கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்தினை திறம்பட தயாரித்ததில் சிறப்பாக செயலாற்றியமைக்கான கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்ட தேசிய விருது திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த  டி.சி. கண்டிகை கிராம ஊராட்சிக்கு வழங்கப்பட்டது.  

கிராமப்புற குழந்தைகளின் நலனைப்  பேணும் வகையிலான வளர்ச்சித் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியமைக்கான, குழந்தை நேய கிராம ஊராட்சிக்கான  தேசிய விருது விழுப்புரம்  மாவட்டம், காணை ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த அனுமந்தபுரம்  கிராம ஊராட்சிக்கு வழங்கப்பட்டது. மேற்கண்ட விருதுகளை பெற்ற தர்மபுரி மாவட்ட ஊராட்சித் தலைவர் எம்.யசோதா, திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஜெ.லதா, கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் கரட்டூர் கே.கே.மணி, ஆண்டாங்கோவில் கிழக்கு கிராம ஊராட்சி தலைவர் எஸ். சாந்தி, குருமந்தூர் கிராம ஊராட்சித் தலைவர் என்.சி.தேவி, அம்புகோவில் கிராம ஊராட்சித் தலைவர் கா.சுமன் காளிதாஸ், நெடுங்கல் கிராம ஊராட்சித் தலைவர் திரு.பி.மகேஸ்வரன்,

இக்கரை பொழுவாம்பட்டி கிராம ஊராட்சித் தலைவர் ஏ.சதானந்தம், மேவளூர்குப்பம் கிராம ஊராட்சித் தனி அலுவலர்/வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி பி. பிச்சையம்மாள், களவனூர் கிராம ஊராட்சி தனி அலுவலர் / வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.செந்தில்முருகன், அனுமந்தபுரம் கிராம ஊராட்சி தனி அலுவலர்/வட்டார வளர்ச்சி அலுவலர் பி.மணிவாசகம் ஆகியோர் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமியை சந்தித்து, விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.இந்த நிகழ்வின்போது, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமைச் செயலாளர் க.சண்முகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை  கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் டாக்டர் கே.எஸ். பழனிசாமி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Panchayat Administration ,Tamil Nadu , Hosur, Tatkal Electric, Link, Farmers...
× RELATED காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக தகவல்...