×

ஓசூரில் தட்கல் மின் இணைப்பு பெற 2-வது நாளாக காத்திருக்கும் விவசாயிகள்..!! மழையிலும், குளிரிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டதால் பரபரப்பு!!

ஓசூர்:  ஓசூரில் தட்கல் முறையில் மின் இணைப்பு பெறுவதற்கான விண்ணப்பங்களை வாங்க விவசாயிகள் 2வது நாளாக காத்திருக்கின்றனர். கடந்த மார்ச் மாதம் சட்டசபையில் பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணி, இந்த ஆண்டு 50 ஆயிரம் புதிய இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என்றார். மேலும் இதில், 25 ஆயிரம் விண்ணப்பதாரா்களுக்கு விரைந்து விவசாய மின் இணைப்பைப் பெறும் வகையில் தட்கல் மின் இணைப்பு திட்டம் மூலமாகவும், 25 ஆயிரம் விண்ணப்பதாரா்களுக்கு சாதாரண வரிசை முன்னுரிமை மற்றும்  சுயநிதி திட்டம் மூலமாகவும் இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார். அதன்படி கடந்த 17ம் தேதி 2020-21 ஆண்டில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்புகள் வழங்கப்படும் என அமைச்சர் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார்.  

இதையடுத்து, விவசாயிகளுக்கு 50 ஆயிரம் இலவச மின்சார இணைப்புகள் வழங்க உள்ள திட்டத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதன்படி இத்திட்டத்தில் பங்கேற்க, வரும் 21ம் தேதி முதல் 31.10.2020 வரை, விண்ணப்ப தொகையை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஓசூரில் தட்கல் முறையில் மின் இணைப்பு பெற ஏராளமான விவசாயிகள் 2வது  நாளாக காத்திருக்கின்றனர்.  அதாவது ஓசூர், தென்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள் மின்வாரிய அலுவலகம் முன்பு திரண்டனர். ஆனால் பல மணி நேரம் காத்திருந்தும் விண்ணப்பங்கள் ஏதும் வழங்கப்பட வில்லை. இதனால் விடியவிடிய காத்திருந்த விவசாயிகள் 2வது நாளாக மின்வாரியம் முன் தொடர்ந்து காத்திருக்கின்றனர். இதையடுத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டதால் அவர்களை கட்டுப்படுத்துவதற்காக ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Hosur , Hosur, Tatkal Electric, Link, Farmers
× RELATED பறிமுதலான வாகனங்கள் ₹25 லட்சத்திற்கு ஏலம்