×

கொரோனா சிகிச்சையில் நம்பிக்கையூட்டுகிறது கபசுர குடிநீர்: மத்திய அமைச்சர் தகவல்

சென்னை: கொரோனா சிகிச்சையில் நம்பிக்கையூட்டுகிறது கபசுர குடிநீர் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்விக்கு மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் பதில் அளித்துள்ளார். கொரோனா சிகிச்சையில் தமிழகத்தில் கபசுர குடிநீர் உள்ளிட்ட சித்த மருத்துவம் பெருவாரியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய ஆயுஷ் துறை அதில் எந்தெந்த ஆய்வு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. பெருவாரியான மக்களுக்கு விநியோகிக்கப்படும்  கபசுரக்குடிநீர் உள்ளிட்ட சித்த மருந்துகள் மீது மேலாய்வுகள் செய்வது, முழுமையான ஆன்டிகோவிட் மருந்துகளை உருவாக்கும் ஆய்வுகள், அலோபதி-ஆயுஷ் கூட்டு மருத்துவ சிகிச்சை ஆய்வுகள் என்ன அளவில் நடைபெற்று வருகின்றன என்று மக்களவையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பினர்.

அதற்கு மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் கூறியதாவது: தமிழகம் மற்றும் பிற பகுதிகளில் கபசுரக் குடிநீர் உள்ளிட்ட பல சித்த மருந்துகளைக் கொண்டு கோவிட் 19  நோயை கையாண்டு வருவதை மத்திய அரசு நன்கு அறிந்துள்ளது. மத்திய ஆயுஷ் துறையானது, சித்த மருத்துவர்களுக்கு கோவிட் நோய்க்கான சித்த மருத்துவ வழிகாட்டுதல் அளித்தும், சித்த மருந்துகளின்  மீது ஆய்வுகள் நடத்த அனைத்து ஊக்குவிப்பும் செய்து வருகின்றது. மத்திய சித்த ஆராய்ச்சி நிலையமும், தேசிய சித்த மருத்துவ நிறுவனமும் முழுவீச்சில் பலகட்ட ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றன. இஎம்ஆர் வழியாக பிற ஆய்வு நிறுவனங்கள் கோவிட் 19 நோயில் சித்த மருந்துகளில் ஆராய்ச்சி செய்யவும் பரிந்துரைகள் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

மேலும், தமிழகத்தில் மட்டும் 29 சித்த மருத்துவ கோவிட் கேர் சென்டர்கள் நியமிக்கப்பட்டு, கிட்டத்தட்ட இதுவரை 16563 பேர் சித்த மருந்துகளால் மட்டுமே கோவிட் நோயில் இருந்து  சிகிச்சை பெற்றுள்ளனர். ஏறத்தாழ 120 மெட்ரிக் டன் கபசுரக் குடிநீர் மற்றும் நிலவேம்புக் குடிநீர் தமிழகத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஒரு கோடியே 23 லட்சத்து 37 ஆயிரத்து 395 பேருக்கு கபசுரக் குடிநீரும் ஒரு கோடியே 32லட்சத்து 53 ஆயிரத்து 115 பேருக்கு நிலவேம்புக்குடி நீரும் வழங்கப்பட்டுள்ளது. மத்திய சித்த மருத்துவ கவுன்சிலின் சித்த மருத்துவமனைகளும், தேசிய சித்த மருத்துவ நிறுவனமும் தமிழக அரசுடன் இணைந்து இப்பணியில் முழு வீச்சில் இயங்கி வருகின்றன.

ஆயுஷ் துறையின் பிரிவான சித்த மருத்துவத்தில் கபசுரக் குடிநீர், நிலவேம்புக்குடிநீர், பிரமானந்த பைரவம், விஷசுரக் குடிநீர், ஆடாதோடை மணப்பாகு, அதிமதுர மாத்திரை, தாளிசாதி சூரணம், சீந்தில் சூரணம், முதலான மருந்துகள் கோவிட் 19 நோயில் பல கட்டத்தில் பயன்படுத்தப்பட அறிவூட்டல் வழங்கப்பட்டுள்ளது. இம்மருந்துகள் மீது பல கிளினிக்கல் மற்றும் ப்ரீகிளீனிக்கல் ஆய்வுகள்  அதாவது நோயாளிகளிடமும், நோயாளிகளுக்கு முந்தையதாக அடிப்படை மருத்துவ ஆய்வுகளும் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் பதில் அளித்துள்ளார்.


Tags : Kapura ,Union Minister , Kapura drinking water gives hope in corona treatment: Union Minister informed
× RELATED சொத்து விவரங்கள் மறைத்த ஒன்றிய...