×

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாக முதல்வர் எடப்பாடியுடன் நபார்டு வங்கி தலைவர் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பாக முதல்வர் எடப்பாடியை சந்தித்து நபார்டு வங்கி தலைவர் சிந்தாலா ஆலோசனை நடத்தினார். முதல்வர் பழனிசாமியை நபார்டு வங்கி தலைவர் சிந்தாலா தலைமை செயலகத்தில் நேற்று மாலை சந்தித்து பேசினார். அப்போது, தலைமை செயலாளர் சண்முகம், நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு துறை செயலாளர்களும், உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
முதல்வருடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில் ஊரக உள்கட்டமைப்பு மேம்பாடு, கூட்டுறவு வங்கிகள் வாயிலாக கடன் வழங்குவதை அதிகரிப்பது, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை உருவாக்குவது, சுய உதவிக் குழுக்களை டிஜிட்டல் மயமாக்குவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

விவசாய உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், சிறு விவசாயிகளின் நலனை பாதுகாக்கவும், பிரதமர் மோடி ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிதியுதவி அளிக்கும் திட்டத்தை சமீபத்தில் துவக்கி வைத்தார். அத்திட்டத்தின் கீழ், நபார்டு வங்கியும், தேசிய வங்கிகளும், தமிழகத்தில் விவசாய குழுக்கள், கூட்டுறவு வங்கிகளுக்கு கடன் வழங்க உள்ளது. இந்நிலையில், தமிழகம் வந்துள்ள நபார்டு வங்கி தலைவர் சிந்தாலா விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்த  நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Edappadi ,NABARD ,Tamil Nadu , Chairman of NABARD consults with Chief Minister Edappadi regarding projects being implemented in Tamil Nadu
× RELATED எச்சரிக்கை, விழிப்புணர்வுடன் வாக்கு...