×

மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையால் ஆன்லைன் வகுப்புகள் 5 நாட்கள் ரத்து: தமிழக அரசு உத்தரவு

சென்னை: பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் இணையவழி வகுப்புகள் ஐந்து நாட்கள் ரத்து செய்யப்படுவதாக பள்ளிகல்விதுறை அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கை: கோவிட் பெருந்தொற்று காரணமாக எழுந்துள்ள அசாதாரண  சூழ்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள சில பள்ளிகளில் ஜூன் மாதம் முதல் இணையவழி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மேலும் பள்ளிகளில் நடத்தப்பெறும் இணையவழி வகுப்புகளால் மாணவர்களுக்கு ஏற்படும்  மன அழுத்தத்தின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

அதன்படி இணையவழி வகுப்புகளில் வருகை, மாணவர்களின் செயல்திறன் மதிப்பீடு நோக்கங்களுக்காக கட்டாயமாக கணக்கிடப்படக்கூடாது. மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்போது இணையவழி வகுப்புகளுக்கு வருகை புரியாத மாணவர்களும், இணையவழி வகுப்புகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு இணையாக பாடங்களில் பயிற்சி பெறுவதற்காக ஆசிரியர்கள் பொறுப்பேற்று தேவைக்கேற்ப கூடுதல் பயிற்சி வகுப்புகள் நடத்தி உறுதிப்படுத்த வேண்டும். மின்னணு முறைகள் மற்றும் மின்னணு சாதனங்கள் மூலம் குழந்தைகளுக்கு தொலைவிலிருந்து அனுப்பப்படும் பாடம் சார்ந்த பணிகள் மற்றும் மதிப்பீடுகள் ஏதும் மாணவர்களின் இறுதித்தரம் / மதிப்பெண்கள் / செயல்திறன் மதிப்பீடு போன்றவற்றை நிர்ணயிக்க  கட்டாயாமாகக் கணக்கிடப்படக்கூடாது என்பன போன்ற மனஅழுத்தத்தை குறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

ஆண்டுதோறும், செப்டம்பர் மாதத்தில் காலாண்டுத் தேர்வுகள் முடிந்து மாணவர்களுக்கு காலாண்டு விடுப்பு அறிவிப்பது நடைமுறையாகும். இணையவழி வகுப்புகள் நடைபெறும் தற்போதைய சூழ்நிலையில், இம்மாதம் 21 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் மட்டும் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. எனவே, அந்த ஐந்து நாட்களில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும் இணையவழி வகுப்புகள் நடைபெறாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu , Student, Quarterly Holiday, Online Classes, 5 Days Canceled, Government of Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...