×

சமூக இடைவெளியின்றி கொரோனா பரிசோதனை்; கர்ப்பிணிகளுக்கு தொற்று பரவும் அபாயம்: தாம்பரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவலம்

தாம்பரம்: தாம்பரம் பட்டேல் நகரில் நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணிகள் சிகிச்சை பெறுகின்றனர். குறிப்பாக, ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமைகளில் கர்ப்பிணிகள் இங்கு வந்து மருத்துவ ஆலோசனை பெறுவது, தடுப்பு ஊசி போட்டுக்கொள்வது மற்றும் சத்து மாத்திரைகள் பெற்றுச் செல்வது வழக்கம். தற்போது இந்த சுகாதார நிலையத்தின் நுழைவு பகுதியில் கர்ப்பிணிகள் பரிசோதனை செய்யும் பகுதிக்கு மிக அருகில் கொரோனா வைரஸ் தொற்று நோய் கண்டறிதல் மற்றும் சளி மாதிரி சேகரிக்கும் மையமும் செயல்பட்டு வருகிறது.

இதனால், கொரோனா வைரஸ் தொற்று நோய் பரிசோதனைக்கு சளி மாதிரி கொடுக்க வருபவர்களும், கர்ப்பிணிகளும் மிக அருகில் சமூக இடைவெளி இல்லாமல் வரிசையில் நிற்கின்றனர். இதனால் கர்ப்பிணிகளுக்கு எளிதாக கொரோனா தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருபவர்கள் பெரும்பாலும் முகக் கவசங்கள் அணியாமல் வருகின்றனர். அவர்களை முகக்கவசம் அணிய சொல்லி சுகா தார நிலைய ஊழியர்கள் வலியுறுத்துவதில்லை. கிருமி நாசினி அங்கு வைக்கப்படவில்லை. சுகாதார நிலையம் சுத்தம் இல்லாமல் காணப்படுகிறது.

இங்கு சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகள் சுகாதார நிலையத்தின் வெளியே அவர்களது காலணிகளை விட்டுவிட்டு வெறும் கால்களில் சுகாதார நிலையத்தின் உள்ளே சென்று வருகின்றனர். இதன் மூலமும் வைரஸ் தொற்று நோய்கள் பரவ அதிக வாய்ப்பு உள்ளதாக கர்ப்பிணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து நகராட்சி சுகாதார அலுவலர்களிடம் பலமுறை புகார் அளித்தும்  எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை, என பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து நகராட்சி சுகாதார அலுவலர் மொய்தீனிடம் கேட்டபோது, ‘‘கொரோனா பரிசோதனைக்கான சளி மாதிரியை இங்கு அப்படித்தான் சேகரிப்பார்கள்.

எந்த பணிகள் மேற்கொண்டாலும் அதில் குறை கூறப்படுகிறது. இதனால் பணிச்சுமை காரணமாக மன அழுத்தம் ஏற்படுகிறது. பேசாமல், வேலை வேண்டாம் என எழுதிக் கொடுத்துவிட்டு சென்று விடலாம் என இருக்கிறேன்,’’என்றார்.

அப்படித்தான் இருக்கும்
சமூக இடைவெளி, கிருமி நாசினி தெளிக்காமல் இருப்பது குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பியபோது, சுகாதார நிலையத்தில் முகக்கவசம் அணியாமல் இருந்த ஊழியர் ஒருவர், மருத்துவமனை என்றால் கூட்டம் கூடத்தான் செய்யும். ஒவ்வொருவரிடமும் சென்று சமூக இடைவெளியில் நில்லுங்கள் என்று சொல்ல முடியாது, இடவசதி இல்லாததால் இப்படி அருகருகில் தான் பரிசோதனை செய்யப்படும். உங்களுக்கு விருப்பம் இல்லையெனில் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள், என்றார்.

அதிகாரிகள் உதவவில்லை
சுகாதார நிலைய ஊழியர் ஒருவர் கூறுகையில், ‘‘கொரோனா பரவலை தடுக்க நகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் முகாம்கள் போடப்பட்டுள்ளது. இந்த முகாம்களுக்கு பந்தல், நாற்காலி, டேபிள் என எந்த உதவியும் நகராட்சி அதிகாரிகள்  செய்யவில்லை. தனியார் சார்பில் மட்டுமே இந்த உதவிகள் செய்யப்பட்டது. அதற்கெல்லாம் முன்வராத நகராட்சி அதிகாரிகள், சுகாதார நிலையத்தில் ஏதாவது குறைகள் என்றால் மட்டும் எப்படி கேள்வி கேட்க முடியும்,’’ என்றார்.

Tags : women ,Tambaram Primary Health Center ,Corona ,examination , Corona examination, pregnancy, infection, risk
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...