×

தனியார் கம்பெனியில் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கண்ணாடி தொழிற்சாலையில் கடந்த 2017 ம் ஆண்டு  சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக சங்கம் தொடங்கப்பட்டது. சங்கம் தொடங்கியதற்காக 28 தொழிலாளர்கள் அப்போது பணிநீக்கம் செய்யப்பட்டனர். பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். சம்பள உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடக்கிறது. இதையொட்டி, கடந்த மாதம் நடந்த 2வது வேலை நிறுத்த போராட்டத்தின் விளைவாக ஊதிய உயர்வு மேற்கொள்ளப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின்போது  பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிற்சாலை நிர்வாகம் தெரிவித்தது.

ஆனால், 20 நாட்களுக்கு ஆகியும் பணி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இந்நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்ட 28 பேருக்கு உடனடியாக பணி வழங்க வலியுறுத்தி கலெக்டர், தொழிலாளர் நலத்துறையின் அறிவுரையை ஏற்காத நிர்வாகத்தை கண்டித்தும், இப்பிரச்னையில் மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு உடனடியாக தலையிட வலியுறுத்தி பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் தினமும் தலா 5 பேர் என காலவரையற்ற உண்ணாவிதப் போராட்டத்தை துவக்கியுள்ளனர். காஞ்சிபுரத்தில், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிஐடியு அலுவலகத்தில் நேற்று மாவட்ட செயலாளர் முத்துக்குமார், மாவட்ட தலைவர் கண்ணன், மாவட்ட பொருளாளர் வசந்தா ஆகியோர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தனர்.

Tags : company , Private Company, Dismissal, Workers, Fasting
× RELATED ஆவின் பால் பாக்கெட்டுகளில்...