×

கொரோனா தொற்றால் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவர்களின் கடும் முயற்சியால் 70% நுரையீரல் பாதிக்கப்பட்டவர் குணம்: நோயாளியின் மகன் அரசு மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து கடிதம்

சென்னை: கொரோனா தொற்றால் 70 சதவீதத்துக்கும் கூடுதலாக நுரையீரல் பாதிக்கப்பட்ட நபருக்கு உயர் சிகிச்சை மூலம் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த 58 வயது நபருக்கு கடந்த 13ம் தேதி கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அவருக்கு சோதனை செய்ததில் 70 சதவீதம் அளவுக்கு நுரையீரலில் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. உயர் சிகிச்சை அளித்து ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் அவருக்கு மறுவாழ்வு அளித்துள்ளதாக அவரது மகன் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். ஓமந்தூரார் மருத்துவமனை முதல்வர் ஜெயந்திக்கு நன்றி தெரிவித்து அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: எனது தந்தைக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு 70 சதவீதம் அளவுக்கு நுரையீரலில் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து நான் தனியார் மருத்துவமனையில் கேட்டபோது பல லட்சம் ரூபாய் செலவாகும்; ஆனால் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து 13ம் தேதி ஆபத்தான நிலையில் எனது தந்தையை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதித்தேன். உயர் தர சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் நல்ல சிகிச்சை அளித்தனர். 17 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் அவர் முழுவதும் குணமடைந்துள்ளார். உண்மையில் ஒமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் அதிசயம் நிகழ்த்தியுள்ளனர். தனியார் மருத்துவமனைகளைவிட அரசு மருத்துவமனையில் உயர் தர சிகிச்சை வழங்கப்படுகிறது என்பதற்கு இதை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : doctors ,government doctors ,Patient , Corona infection, life-threatening condition, doctor, hard work, 70% lung disease character, patient's son, government doctor, thank you letter
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...