×

மணல் கடத்தலில் சிக்கினால் இனி முன்ஜாமீன் கிடையாது: சென்னை ஐகோர்ட் அதிரடி; ஒரே உத்தரவில் 40 பேர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை: மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு இனி முன்ஜாமீன் கிடையாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மணல் கடத்தல் வழக்குகளில் சிக்கியவர்கள் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த 40 மனுக்கள், நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில்  ஆஜரான கூடுதல் குற்றவியல் வக்கீல் முகமது ரியாஸ் மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்க கடும் ஆட்சேபம் தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, “ நாட்டையே ஊரடங்கு முடக்கி போட்டிருந்தாலும் மணல் கடத்தல்காரர்களை மட்டும் இந்த ஊரடங்கு பாதிக்கவில்லை. இத்தகையவர்களால் நிலத்தடி நீர் ஆதாரங்களும் சுற்றுச்சூழலும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றன.

கடந்த ஆகஸ்ட் மாதம் வரை நீதிமன்றத்திற்கு வந்த மணல் கடத்தல் தொடர்பான முன்ஜாமீன் வழக்குகளில் கடுமையான நிபந்தனைகள் மற்றும் அபராதம் விதித்து முன்ஜாமீன் வழங்கிய போதும், நீதிமன்றத்திற்கு வரும் முன்ஜாமீன் வழக்குகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. தினந்தோறும் குறைந்தது மணல் கடத்தல் தொடர்பான 15 முன்ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு வருகின்றன. மணல் கடத்தலை தடுக்க நீதிமன்றங்கள் கடுமையான பல உத்தரவுகளை பிறப்பித்தும் அதை கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவி வருகிறது.

எப்படியாயினும் முன்ஜாமீன் பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து அத்தகையவர்கள் கடத்தலில் ஈடுபட்டு வருகிறார்கள். முன்ஜாமீன் வழங்கப்படும்போது விதிக்கப்படும் அபராதங்களை தொழில் செலவாகவே அவர்கள் கருதத் தொடங்கி விட்டனர். கனிமங்கள், மணல், காடுகள் என சுற்றுச்சூழலை பேணி பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு அதனை கொண்டு செல்ல வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை. உயர் நீதிமன்றம் இது தொடர்பாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து இருந்தாலும், அதனை அரசு மற்றும் அதிகாரிகள் உரிய முறையில் அமல்படுத்துவதில்லை. அப்படி ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால், கடத்தல்காரர்களுக்கு முன் ஜாமீன் கிடைக்கும் வரை காவல் துறையினரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் அவர்களை கண்டு கொள்வதில்லை. சுற்றுச்சூழலை பேணிக்காக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, இனி மணல் கடத்தல் தொடர்பான வழக்குகளில் முன் ஜாமீன் கோருபவர்களுக்கு உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்காது என்று இந்த நீதிமன்றம் தெரிவிக்கிறது. முன் ஜாமீன் கோரிய 40 மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று அதிரடியான ஒரு உத்தரவை பிறப்பித்தார். இந்த உத்தரவை அனைத்து செஷன்ஸ் நீதிமன்றங்களுக்கும் அனுப்ப வேண்டும் என்று உயர் நீதிமன்ற பதிவாளருக்கும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

Tags : Sand smuggling, no more pre-bail, Chennai iCourt, single order, 40 people, pre-bail petition dismissed
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...