×

பழநி கோயிலுக்குள் செல்போனுக்கு தடை: கோயில் நிர்வாகம் முடிவு

பழநி: பழநி கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்க கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் மூலவர் சிலை அரியவகை நவபாஷாணத்தால் ஆனது. தற்போது பழநி கோயிலில் செல்போன்,  கேமராக்கள் மூலம் படம்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், ஆர்வமிகுதியால் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சிலர் மூலவரை செல்போன் மூலம் படம் பிடித்து விடுவதுடன், இதனை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்கின்றனர். இது ஆகம விதிகளுக்கு முரணாக அமைந்து விடுவதுடன், பாதுகாப்பாற்ற சூழல் நிலவுகிறது. எனவே, பழநி கோயிலில் செல்போனுக்கு தடை விதிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இதன்படி அடிவாரம், மலைக்கோயிலில் கட்டண அடிப்படையில் பக்தர்கள் கொண்டு வரும் செல்போன்களை பெற்று கொண்டு டோக்கன் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கீழே ஒரு கட்டணமும், மலை மீது 3 மடங்கு கட்டணமும் வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. இம்முறையை பயன்படுத்தினால் காலப்போக்கில் பக்தர்களே கோயிலுக்கு வரும்போது செல்போன்களை தங்களது சொந்த பொறுப்பில் பத்திரப்படுத்தி விட்டு வந்து விடுவார்கள் என்று கணக்கிடப்படுகிறது. இதற்காக வின்ச் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தனி ரேக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் இம்முறை நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில், பக்தர்களின் அவசர தொடர்புக்கு வசதியாக மலைக்கோயிலில் போன் பூத்கள் அமைக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.



Tags : Palani ,Temple ,administration , Cellphone ,ban ,Palani , Temple, administration ,decides
× RELATED பழநி மலைக் கோயிலில் தடையை மீறி செல்போனில் பேசிய அண்ணாமலை