×

'ஊர்காவல் படைக்கு சங்கம் அமைப்பது தண்டனைக்குரிய குற்றம்' - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

சென்னை:  ஊர்காவல் படைக்கு சங்கம் அமைப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது. ஊர்காவல் படையை சேர்ந்த நாகேந்திரன் என்பவர் அவரது ஊரில் நலச்சங்கம் ஒன்றை அமைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் மீது துறைரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதாவது ஊர்க்காவல் படையிலிருந்து அவர் நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் இதனை எதிர்த்து நாகேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார்.

இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், உள்துறை ஊடுதல் செயலர் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனுவை தமிழக அரசு இன்றைய தினம் தாக்கல் செய்துள்ளது. அதில் ஊர்காவல் படை என்பது சட்டபூர்வ அதிகாரமில்லாத தன்னார்வ அமைப்பு எனவும், தேவையை பொறுத்து அவர்கள் பணிக்கு அழைக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் நாளொன்றுக்கு அவர்களுக்கு ரூ.560 ஊதியமாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து காவல் துறைக்கு சங்கம் வைக்க சட்டபூர்வமான அனுமதி இல்லை என்கிறபோது காவல் துறை பணிகளை மேற்கொள்ளக்கூடிய, ஊர்க்காவல் படைக்கு சங்கம் வைக்க அனுமதி இல்லை என கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, அரசின் அனுமதி இன்றி சங்கம் அமைக்கப்படுவது தண்டனைக்குரிய குற்றம் எனவும் அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கானது நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பான வழக்கு விசாரணையை வருகிற திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

Tags : High Court ,Kayts ,Government of Tamil Nadu , punishable offense, Government of Tamil Nadu , High Court,
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...