×

கன்னியாகுமரியில் காங்கிரஸ் மூத்த தலைவர் வசந்தகுமார் எம்.பி. உடல் நல்லடக்கம்: அனைத்து கட்சியினர், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

நாகர்கோவில்: மறைந்த வசந்தகுமார் எம்.பி. உடல் சொந்த ஊரான குமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரத்தில் உறவினர்கள், கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர்  குடும்ப  தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயல் தலைவரும், கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யுமான எச்.வசந்தகுமார் (71). கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 10ம் தேதி சென்னையில் ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி கடந்த 28ம் தேதி மாலையில் மரணமடைந்தார். அன்றிரவு, தி.நகர், நடேசன் தெருவில் உள்ள அவரது இல்லத்திலும் மறுநாள் சென்னையில் உள்ள காமராஜர் அரங்கில் சில நிமிடங்களுகும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

பின்னர், சொந்த ஊரான குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துவரப்பட்டது. இரவு 12 மணியளவில் வசந்த்குமார் உடலுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளர் கே.சி.வேணுகோபால், மாணிக்கம் தாகூர் எம்.பி, ஹரிநாடார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து நேற்று காலை 5 மணியில் இருந்து தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். உடல் அருகே அவரது மனைவி தமிழ்ச்செல்வி, மகன்கள் வினோத்குமார், விஜயகுமார், மகள் தங்கமலர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க  அமர்ந்திருந்தனர்.

குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே, நாகர்கோவில் ஆர்டிஓ மயில், கேரளா காங்கிரஸ் நாடாளுமன்ற கொறொடா கொடிக்குன்னில் சுரேஷ், கரூர் எம்.பி. ஜோதிமணி, காங்கிரஸ் செயல் தலைவர் மயூராஜெயக்குமார், எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மனோதங்கராஜ், பிரின்ஸ், ராஜேஷ்குமார், அனிதாராதாகிருஷ்ணன், டாக்டர் பூங்கோதை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் அசோகன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், வர்த்தகர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா சார்பாகவும், கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னித்தலா சார்பாகவும் மலர் வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. காலை 9.25 மணிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நிறைவு பெற்று 9.50 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனம் ஒன்றில் உடல், கல்லறை தோட்டத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. முற்பகல் 11.30 மணிக்குமேல் இறுதி சடங்குகள் நடைபெற்று உடல் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, கல்லறை தோட்டத்துக்கு செல்கையில் சுமார் ஒன்றரை கி.மீ தூரம் உறவினர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் என்று ஏராளமானோர் ஊர்வலமாக நடந்து சென்றனர்.

Tags : Vasantha Kumar ,Parties ,Congress ,Kanyakumari ,Public , Kanyakumari, Congress Senior Leader Vasantha Kumar MP, Physical Fitness, All Parties, Public, Tear Tribute
× RELATED நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி...