×

அடிப்படை வசதிகள் இல்லாததால் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் போராட்டம் அறிவிப்பு: போஸ்டர் ஒட்டியதால் படூர் ஊராட்சியில் பரபரப்பு

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியம் படூர் ஊராட்சி, சென்னையை ஒட்டிய புறநகர் பகுதியாக வளர்ச்சியடைந்து வருகிறது. இதையொட்டி, படூர் ஊராட்சியில் கணிசமாக மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது. இங்குள்ள ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், 1000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் வெளிநாட்டில் இருப்பவர்களை தவிர்த்து தற்போது 650 குடும்பங்களை சேர்ந்த 2500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு மாதாந்திர பராமரிப்புக்காக ஒரு தொகை வசூலிக்கப்படுகிறது. ஆனால், அடுக்குமாடி குடியிருப்பை உருவாக்கிய கட்டுமான நிர்வாகம் அடிப்படை வசதிகளை செய்யவில்லை என குடியிருப்புவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். குறிப்பாக ஓஎம்ஆர் சாலையில் இருந்து, குடியிருப்புக்கு செல்லும் சாலையை அங்கீகார விதிப்படி படூர் ஊராட்சியிடம் ஒப்படைத்து தானப்பத்திரம் செய்து கொடுத்தாலும், நாங்களே பராமரித்து கொள்கிறோம் என கூறி, இதுவரை சாலையை பராமரிக்காமல் வைத்துள்ளனர்.

மேலும், சாலையின் இருபுறமும், மின்விளக்கு இல்லாததால், வேலை முடிந்து இரவு நேரங்களில் வீடு திரும்புவோர் கடும் இருளில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து படூர் ஊராட்சி நிர்வாகம், திருப்போரூர் ஒன்றிய நிர்வாகம் ஆகியவற்றில் குடியிருப்புவாசிகள், புகார் அளித்தனர். அதற்கு, கட்டுமான நிறுவனமே அடிப்படி வசதிகள் செய்வதாக உறுதியளித்து, முறைப்படி ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கவில்லை. இதனால், அரசு தரப்பில் எதுவும் செய்ய முடியாது என அதிகாரிகள் கூறி விட்டனர். இதனால் கோடிகளை கொட்டி வீடுகளை வாங்கி நிம்மதியும், பாதுகாப்பும் இல்லாமல் வாழ்வதாக குடியிருப்புவாசிகள் கூறுகின்றனர். இந்நிலையில் முதற்கட்டமாக குடியிருப்புவாசிகள் அனைவரும் திரண்டு, நேற்று மாலை போராட்டம் நடத்துவதாகவும், தொடர்ந்து ஓஎம்ஆர் சாலையில் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாகவும் போஸ்டர் ஒட்டி அறிவிப்பு செய்தனர். இதையறிந்த உள்ளாட்சி நிர்வாகம், கட்டுமான நிறுவனம், காவல்துறை சார்பில் குடியிருப்புவாசிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர், அடிப்படை பராமரிப்பு வசதிகளை உடனடியாக செய்து தருவதாக உறுதியளித்தனர். இதையடுத்து குடியிருப்புவாசிகள், போராட்டத்தை தற்காலிமாக ஒத்தி வைப்பதாகவும், உறுதியளித்தபடி கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் கண்டிப்பாக போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

Tags : Apartment dwellers ,Badur ,protest ,announcement ,facilities , Basic facilities, apartment dwellers, protest, announcement
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...