×

வானகரத்தில் குடியிருப்பு பகுதியில் குப்பைகிடங்கு அமைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் நூதன போராட்டம்

பூந்தமல்லி: சென்னை போரூரை அடுத்த வானகரம் ஊராட்சிக்கு உட்பட்ட 6 வது வார்டு ஜெயராம் நகரில் குடியிருப்பு பகுதியில் குப்பை கிடங்கு அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஸ்டெச்சரில் நோயாளி படுத்திருப்பதுபோல நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். வானகரம் ஊராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பையை கொண்டு வந்து  இந்தப் பகுதியில் குப்பை கிடங்கு அமைத்து தரம்பிரித்து அனுப்ப ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. குப்பைகிடங்கு அமைய உள்ள இடத்தில் மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி உள்ளது. மேலும் இந்த இடத்தை சுற்றி 100க்கும் மேற்பட்ட வீடுகள், தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இங்கு குப்பை கொட்டப்படுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன், துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கடியுடன், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது உடல் நலம் பாதிக்கப்பட்ட நோயாளி ஸ்ட்ரெச்சரில் படுத்திருப்பது போலவும், அவர்களுக்கு குளுகோஸ் ஏற்றுவது போல நூதனமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: குடியிருப்பு மத்தியில் குப்பைக்கிடங்கு அமைப்பதால் நோய் தொற்று ஏற்படுகிறது. 15க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்றால் அவதிப்படும்போது குப்பை கொட்டி நோய் பரப்பும் கேந்திரமாக மாற்றுவது கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மீறி குப்பை கிடங்கு அமைத்தால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றனர்.

Tags : landfill , Opposition to the construction of a landfill in Vanakaram: Public Innovation Struggle
× RELATED அரசு மருத்துவமனையில் இருந்து...