×

தமிழகத்தில் உதவி ஆய்வாளர் தேர்வில் முறைகேடு நடந்ததால் மறுதேர்வு கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: காவலர் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 969 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு, கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. இந்த தேர்வில் சுமார் 1.5 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் சுமார் 5,275 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில் தேர்வில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காப்பியடித்து தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், புகார் எழுந்தது. இதனால் தேர்வினை மீண்டும் நடத்தக்கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, பொது பிரிவு மற்றும் காவலருக்கான தனி பிரிவு ஆகிய இரண்டிலும் முறைகேடு நடந்துள்ளதாகவும், அதிலும் குறிப்பிட்ட தேர்வு மையங்களில் தேர்வெழுதியவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக தேர்ச்சிபெற்றுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் மாவட்டங்கள் வெவ்வேறாக இருந்தாலும் தேர்வில் தேர்ச்சிபெற வைப்பதற்காக சில அதிகாரிகள் அவர்களுக்கு உதவி செய்துள்ளதாக கூறியுள்ளார். இதற்கு தனியார் மையங்களும் உடந்தையாக உள்ளன என குறிப்பிட்டிருந்தார். மேலும் அதைதொடர்ந்து, தேர்வு மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை என்றும், செல்போன்கள் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் வழக்கானது உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து தமிழக அரசு சீருடை பணியாளர் தேர்வாணையம் மற்றும் டி.ஜி.பி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Tags : Chennai High Court ,Tamil Nadu ,orders re-election , Chennai High Court,orders, re-election , Tamil Nadu govt.
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...