உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி காணொலி காட்சி மூலம் சபாநாயகர் நாளை தகுதி நீக்க வழக்கில் 11 எம்எல்ஏக்களிடம் விசாரணை..!!

சென்னை: ஓ.பி.எஸ். உள்பட 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் உரிய விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியதை தொடர்ந்து நாளை காலை 11 மணியளவில் தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக 11 எம்.எல்.ஏக்களிடமும் சபாநாயகர் விசாரணை மேற்கொள்ளவுள்ளார்.

துணை முதலமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வம், சோழன்வந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், பாண்டியராஜன், செம்மலை, சண்முகநாதன், நட்ராஜ், ஆறுக்குட்டி, சின்னராஜ், மனோரஞ்சிதம், சரவணன், அருண்குமார் மற்றும் மனோகரன் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் போது ஆட்சிக்கு எதிராக வாக்களித்தனர்.

தற்போது இரு அணிகளும் ஒன்றாக இணைந்ததற்கு பின்பாக எவ்விதமான நடவடிக்கையும் சபாநாயகர் மேற்கொள்ளாமல் இருப்பது ஒருதலைபட்சம் என்ற அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் முடிவில் உச்சநீதிமன்றமானது இது தொடர்பான உரிய நடவடிக்கையை சபாநாயகர் மேற்கொள்ளலாம் என்று அறிவுறுத்தியிருந்தது.

 இதன் அடிப்படையில் 11 சட்டமன்ற உறுப்பினர்களுடன் நாளை சபாநாயகர் காணொலி காட்சி வாயிலாக விசாரணை மேற்கொள்ளவிருக்கிறார். இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு 11 சட்டமன்ற உறுப்பினர்களிடம் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அளித்த வாக்கு தொடர்பாக உரிய விசாரணையை சபாநாயகர் மேற்கொண்டு அடுத்தகட்ட முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

More
>