×

பராகுவேயில் கைதான ரொனால்டினோ விடுதலை

அசன்சியன்: போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்ததற்காக பராகுவேயில் கைது செய்யப்பட்ட பிரேசில் கால்பந்து நட்சத்திரம் ரொனால்டினோ 5 மாதங்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார். உலக கோப்பை வென்ற  பிரேசில் அணியில் விளையாடியவர் ரொனால்டினோ (40). சுற்றுச்சூழல் விதிகளை மீறியதற்காக இவரின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், மார்ச் மாதம் பராகுவேயில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக தொண்டு நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றிருந்தார். இதற்காக போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய புகாரில் மார்ச் 3ம் தேதி கைது செய்யப்பட்டார். உடன் சென்ற அவரது மேலாளரும் சகோதரருமான ரபார்ட்டோவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பராகுவே கால்பந்து சங்கம் மேற்கொண்ட தொடர் முயற்சிகளை அடுத்து, மார்ச் மாத இறுதியில் வீட்டுசிறையில் இருக்க நீதிமன்றம் அனுமதித்தது. அதனால் அசன்சியானில் உள்ள சொகுசு விடுதியில் ரொனால்டினோ தங்கியிருந்தார்.

வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ‘நீதிமன்ற நிபந்தனைகளை அப்படியே ஏற்கிறோம். பிரேசில் செல்ல அனுமதிக்க வேண்டும்’ என்று ரொனால்டினோ தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், ‘ரொனால்டினோ சகோதரர்கள் எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால், நிரந்தர முகவரியை மாற்றினால் உடனடியாக அதனை நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும். 4 மாதங்களுக்கு ஒருமுறை பிரேசில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இப்படி தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு செய்ய வேண்டும்.இந்த வழக்கை முடிக்கவில்லை. நிபந்தனைகளை கடைபிடிக்க அவர்கள் ஒப்புக் கொண்டதால் வழக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறது’ என உத்தரவிட்டனர். இருவரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்தியதை அடுத்து, நேற்று விடுவிக்கப்பட்டனர்.

Tags : Ronaldinho ,Paraguay Ronaldinho ,prison , Paraguay, arrested Ronaldinho, released
× RELATED இறுதிப் போட்டியில் இந்தியாவை...