×

பொதுமக்கள் ஆன்லைன் மூலம் போலீசாரிடம் புகார் தெரிவிக்க மொபைல் செயலி அறிமுகம்: மாவட்ட எஸ்பி. பேட்டி

ஊட்டி:  நீலகிரி மாவட்டத்தில் காவல் நிலையத்திற்கு வராமல் நேரடியாக பொதுமக்கள் புகார் அளிக்க வசதியாகவும், சுற்றுலா பயணிகள் பயன்படுத்தி  கொள்ள வசதியாகவும் காவல்துறைக்கென பிரேத்யேக மொபைல் செயலியை மாவட்ட எஸ்பி., அறிமுகம் செய்து வைத்தார்.நீலகிரி மாவட்டத்தில் காவல்துறைக்கென ‘Nilgiris District Poilce’ என்ற மொபைல் செயலி (ஆப்) உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ஊட்டியில்  உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்பி.  சசிமோகன் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து அவர் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், தேவாலாவை சேர்ந்த பொதுமக்கள் எஸ்பி.யை சந்தித்து நேரடியாக புகார்  அளிப்பதற்காக வருகின்றனர். தூரத்தில் இருந்து வருவதால் நேர விரயம், தாமதம், வீண் அலைச்சல் போன்ற பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர்.  மேலும் தற்போது கொரோனா தொற்று உள்ளதால் பயணம் செய்து வந்து புகார் அளிப்பதில் சிக்கல் உள்ளது.

 இதனை தவிர்க்கும் பொருட்டு நீலகிரி மாவட்ட காவல்துறைக்கென தனியாக பிரத்யேக ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதனை  பயன்படுத்தி நேரடியாக வராமல் செயலி மூலமாக புகார் அளிக்கலாம். ேமலும் நீலகிரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் சுலபமாக தங்களது  புகார்களை இந்த செயலி மூலம் அளிக்க முடியும்.
செயலி மூலம் பெறப்படும் புகார்களை நேரடியாக இதற்கென நிறுவப்பட்டுள்ள கட்டுபாட்டு அறை மூலம், உடனடியாக சம்பந்தப்பட்ட காவல்  நிலையத்திற்கு நேரடியாகவும், மின் அஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். இச்செயலியில் நீலகிரி மாவட்டத்தில்  உள்ள அனைத்து காவல் அதிகாரிகள், காவல் நிலையங்கள் சிறப்பு பிரிவுகள் உட்பட அனைத்து விவரங்கள் மற்றும் தொலைபேசி எண்களும் உள்ளன.

 மேலும் இதில், சுற்றுலா பயணிகள் தாங்கள் விருப்பப்பட்டு செல்ல வேண்டிய சுற்றுலாத்தலங்களின் விவரங்கள், தாங்கள் இடத்தின் அருகில் உள்ள  காவல் நிலையம், பஸ் நிலையம், வாகன நிறுத்துமிடங்கள், வாட்டர் ஏடிஎம்., ஆகியவை குறித்த விவரங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த செயலியை  பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.  இந்நிகழ்ச்சியில் தனிப்பிரிவு ஆய்வாளர் சுபாஷினி மற்றும் காவலர்கள் பங்கேற்றனர்.

Tags : District ,SP ,public , public ,online,mobile ,report, police,SP, Interview
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்