×

வாலிபர் கொலையில் 5 பேர் கைது கஞ்சா விற்கும் தகராறில் வெட்டிக்கொன்றோம்: பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: கேளம்பாக்கம்  அடுத்த தையூர் பெரிய பில்லேரி பகுதியை சேர்ந்த மதுரைமுத்து என்பவரின் மகன் ஹரீஷ் (21), நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகில் உள்ள மைதானத்தில் நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த மர்மநபர்கள், ஹரீஷை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பினர். போலீசார் விசாரணையில், ஹரீஷ்க்கு வேலை இல்லாததால் செலவுக்கு பணமின்றி தவித்துள்ளார். இதனால், சென்னை மற்றும் படப்பையில் இருந்து மொத்தமாக கஞ்சா, அபின் போன்ற போதை பொருட்களை வாங்கி வந்து, சிறிய பொட்டலங்களாக பிரித்து, ஓஎம்ஆர் சாலையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. கடந்த 5 மாதமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், கஞ்சா விற்பனை இல்லை.

இதையடுத்து கேளம்பாக்கம், படூர், புதுப்பாக்கம், தையூர் கிராமங்களை சேர்ந்த உள்ளூர் இளைஞர்களுக்கு கஞ்சா, அபின் சேவையை ஹரீஷ் விரிவுபடுத்தியதாக தெரிகிறது. இதனால், ஏற்கனவே கஞ்சா, அபின் விற்பனையில் ஈடுபட்டிருந்த கேளம்பாக்கம் ஜோதி நகரில் வசித்து வரும் பச்சை (எ) தமிழ்மாறன் (21) என்பவருடன் மோதல் ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் இருதரப்பினரும் மோதலில் ஈடுபட்டனர். அப்போது ஹரீஷ், நான் உள்ளூரை சேர்ந்தவன், நீ வெளியூரில் இருந்து வந்து இங்கு கஞ்சா விற்னையில் ஈடுபடுகிறாயா, ஒரு வாரத்தில் உன்னை போட்டுத்தள்ளுகிறேன் என தமிழ் மாறனிடம் சவால் விட்டுள்ளார். இதனால் பயந்து போன அவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து ஹரீஷை கொலை செய்ததது தெரிந்தது. இதையடுத்து, பச்சை (எ) தமிழ்மாறன், சக்தி (20), ஷாகுல் (19), ஆட்டோ வினோத் (21), மாதா கோயில் தெரு தீபக் (21) ஆகியேரை நேற்று கைது செய்தனர்.

போதைக்கு அடிமை:ஓஎம்ஆர் சாலையில் ஏராளமான வடமாநில கூலி தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். இவர்கள் மூலம் சென்னை புறநகர் பகுதிகளுக்கு கஞ்சா கொண்டு வரப்பட்டு கண்ணகி நகர், எழில் நகர் பகுதிகளில் பாக்கட் செய்து, கல்லூரி உள்ள பகுதிகளில் மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடைபெறுகிறது.  கடந்த 5 மாதங்களாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், உள்ளூர் இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்கப்படுகிறது. இதனால் கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும், 15 வயதை தாண்டிய பள்ளி மாணவர்களும் போதைக்கு அடிமையாகி வருகின்றனர்.


Tags : killing ,conflict , Youth murder, 5 arrested, cannabis, murder, confession
× RELATED கூட்டணிக்குள் ஆரம்பித்தது மோதல்...