×

பத்திரப்பதிவு செய்யப்படும் கட்டடங்களுக்கான வழிகாட்டு மதிப்பு சென்னையில் 20% உயர்வு..!!

சென்னை: பத்திரப்பதிவு செய்யப்படும் கட்டடங்களுக்காக வழிகாட்டு மதிப்பு சென்னையில் 20 சதவீதமும், கோவை, ஈரோடு, திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் 15 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பத்திரப்பதிவின் போது வீடுகள், தொழிற்சாலைகள் போன்ற சொத்துக்களை வாங்கும் போது நிலத்தின் மதிப்புடன் கட்டடங்களின் மதிப்பையும் பத்திரத்தில் குறிப்பிட வேண்டும். இந்த கட்டடங்களை எப்படி மதிப்பிட வேண்டும் என்பதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டு மதிப்புகளை பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. அதன்படி சாதாரண, சிறப்பு, அடுக்குமாடி, வணிகம், மருத்துவமனை என 15 தலைப்புகளில் கட்டடங்கள் வகைப்படுத்தப்பட்டு வழிகாட்டு மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை மாநகராட்சி மற்றும் அதன் 32 கிலோ மீட்டர் சுற்றளவு வரை 15 வகையான கட்டடங்களுக்கு வழிகாட்டு மதிப்பு 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் கான்கிரீட் கூரையுடனான கட்டடங்களின் தரைத்தள மதிப்பு, சதுர மீட்டருக்கு என 8,980 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு கட்டட வகைகளுக்கும் மதிப்பு உயர்த்தப்பட்டுள்ளது. கோவை, ஈரோடு, மாநகராட்சி பகுதிகளில் கட்டடங்களுக்கான வழிகாட்டு மதிப்பு 15 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. திருச்சி, மதுரை, சேலம், நெல்லை, தூத்துக்குடி, வேலூர், தஞ்சை, திண்டுக்கல் ஆகிய மாநகராட்சிகளில் 15 வகையான கட்டடங்களுக்கு வழிகாட்டு மதிப்பு 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் கட்டடங்களுக்கு 10 சதவீதமும், அனைத்து நகராட்சி பகுதிகளில் 5 சதவீதமும் வழிகாட்டு மதிப்பு உயர்த்தப்பட்டுள்ளது. வழிகாட்டு மதிப்பு உயர்த்தப்பட்டதை அடுத்து, முத்திரை தீர்வையையும் அதன் அடிப்படையில் அதிகரிப்பது என பதிவுத்துறை முடிவு செய்துள்ளது. கட்டடங்களுக்கான வழிகாட்டு மதிப்பு உயர்வு கடந்த 16ம் தேதி முதல் அமலுக்கு வந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

Tags : buildings ,Chennai , Deed, Buildings, Guidance Value, Chennai
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...