×

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு!: காவலர் செல்லத்துரையின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து மதுரை நீதிமன்றம் உத்தரவு..!!

மதுரை: சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் செல்லத்துரையின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தன்குளத்தில் தந்தை - மகன் இரட்டை கொலை விவகாரத்தில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர்,  உதவி காவல் ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்களில் சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை கரோனாவால் உயிரிழந்தார். இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவலர் செல்லத்துரை, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தாண்டவன் முன்னிலையில் இன்று  விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது காவலர் செல்லத்துரை மற்றும் சி.பி.ஐ தரப்பில் வழக்கறிஞர்கள் காணொளி காட்சி வாயிலாக வாதம் நடத்தினர். அப்போது மனுதாரருக்கு ஜாமின் வழங்கினால் சாட்சியங்களை கலைக்க வாய்ப்புள்ளது. எனவே செல்லத்துரைக்கு ஜாமின் வழங்கக்கூடாது என்று சி.பி.ஐ தரப்பு வழக்கறிஞர் திரு. விஜயன் செல்வராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி தாண்டவன், காவலர் செல்லத்துரையின் ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags : Sellathurai ,Sathankulam ,court ,Madurai , Sathankulam father - son murder, police sellathurai, bail petition, dismissal
× RELATED சாத்தான்குளம் கொலை வழக்கு 3 மாதத்தில்...