×

கடனை திருப்பி செலுத்தாததால் சினிமா பாணியில் ரவுடித்தனம் 34 பயணிகளுடன் பேருந்து கடத்தல்

*உபி.யில் நள்ளிரவில் நிதி நிறுவன குண்டர்கள் அட்டகாசம்

லக்னோ : கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், மக்கள் தங்கள் வருமானம், வேலையை இழந்து தவிக்கின்றனர். இதனால் அவர்கள் வங்கிகள், நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனை வசூலிக்க, அரசு தடை விதித்துள்ளது. அதையும் மீறி, வங்கிகளும், நிதி நிறுவனங்களும் குண்டர்களை ஏவி விட்டு, பணத்தை வசூலிப்பதால் மக்கள் தற்கொலை செய்யும் அளவுக்கு செல்கின்றனர். இது பற்றி தேசிய அளவில் புகார்கள் குவிந்த போதிலும், கெடுபிடி வசூல் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கு, இந்த சம்பவமே சிறந்த உதாரணம்.

உத்தர பிரதேச மாநிலம், ஆக்ரா மாவட்டம். மல்புரா காவல் நிலையத்துக்கு உட்பட பகுதி. செவ்வாய்கிழமை இரவு 10.30 மணி. தூங்கும் வசதி கொண்ட தனியார் சொகுசு பேருந்து அது.  அரியானா மாநிலம் குருகிராமில் இருந்து புறப்பட்டு, மத்திய பிரதேசத்தில் உள்ள பன்னாவுக்கு சென்று கொண்டிருந்தது. அதில், 34 பயணிகள் இருந்தனர். சிலர் செல்போனை கிளறிக் கொண்டிருந்தனர். சிலர், பேருந்தின் ஸ்பீக்கரில் ஒலித்த இசையுடன் லயித்துக் கொண்டிருந்தனர். ஒரு சிலர், உண்ட மயக்கத்தில் பாதி தூக்கத்தில் இருந்தனர். ரைபா சுங்கச்சாவடியை தாண்டி, தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்றது.

அப்போது, பின்னால் வந்து கொண்டிருந்த 2 கார்கள், மின்னல் வேகத்தில் பேருந்தை முந்திச் சென்று, முன்னால் போய் நின்றன. அதில் இருந்து 9 பேர் தாவி குதித்து ஓடி வந்து, பேருந்தை மறித்தனர். இரவு நேரம்... நெடுஞ்சாலை... ஆளில்லா பகுதி... கொள்ளை கூட்டத்தை சேர்ந்தர்களாக இருக்குமோ... பயணிகளும், டிரைவரும் பீதி அடைந்தனர். வந்தவர்களில் ஒரு குண்டன், ‘மரியாதையா பஸ்சை விட்டு இறங்கு... நாங்க பைனான்ஸ் கம்பெனியில இருந்து வர்றோம்...’ என்றான் மிரட்டலுடன். அதை பொருட்படுத்தாத, டிரைவர் சட்டென்று பேருந்தை கிளப்பி சென்றார். அந்த கும்பல் காரை கிளப்பி, பேருந்தை துரத்த தொடங்கியது. சில கிமீ தூரத்துக்கு இந்த துரத்தல் நடந்தது. ஒரு கட்டத்தில், 2 கார்களும் மீண்டும் பேருந்தை முந்திச் சென்று நின்றன. இம்முறை, காரில் வந்த கும்பல் பேருந்தில் ஏறியது. டிரைவரையும், கண்டக்டரையும் மிரட்டி, கீழே இறக்கியது. அவர்களை சில குண்டர்கள் காரில் தூக்கிப் போட்டனர். பேருந்தில் ஏறி ஒருவன், அதை ஓட்டத் தொடங்கினான். மற்றொருவன், ‘இதோ பாருங்க... யாரும் பயப்படாதீங்க... நாங்க பைனான்ஸ் கம்பெனிய சேர்ந்தவங்க... உங்களை ஒண்ணும் செய்ய மாட்டோம்..’ என்றான்.

பிறகு, டெல்லி - கான்பூர் நெடுஞ்சாலையில் பேருந்து ஓடியது. குபேர்பூர் என்ற இடத்தில், கார்கள் நின்றன. டிரைவர், கண்டக்டரை குண்டர்கள் கீழே இறக்கி விட்டனர். அவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு சென்று நடந்ததை கூறினர். அப்போது, நேரம் அதிகாலை 4 மணி. போலீஸ் ஆட்டம் தொடங்கியது. பேருந்தை தேடினர். இறுதியாக, ஒரு இடத்தில் பேருந்தை மறித்தனர்.போலீசை பார்த்ததும் காரில் வந்த குண்டர்களும், பேருந்தில் இருந்த குண்டர்களும் இருட்டில் இறங்கி தப்பினர். பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இச்சம்பவம் பற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இறந்து கிடந்த உரிமையாளர்

கடத்தப்பட்ட பேருந்தின் பதிவு எண், யுபி75எம். உத்தர பிரதேசத்தில் உள்ள மீரட்டில் பதிவு செய்யப்பட்டது. ஆனால், பேருந்தின் உரிமையாளர் மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியரை சேர்ந்தவர். நேற்று முன்தினம்தான் அவர் இறந்துள்ளார். பேருந்து கடத்தப்பட்ட நேரத்தில் அவர் சடலமாக வீட்டில் கிடந்தார். அவருடைய மகன் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.


இது தான் யோகி மாடலா?

பரபரப்பான இந்த சம்பவத்தால் உத்தரப்பிரதேச மாநில அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. அச்சமின்றி குற்றவாளிகள் செயல்படுவதுதான் யோகி மாடல் சட்டம் ஒழுங்கா? என்று உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவரான அஜய்குமார் லல்லு கேள்வி எழுப்பியுள்ளார். சமாஜ்வாடி கட்சியும், பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு வீடு திரும்பியதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

Tags : passengers ,UP ,Agra , Agra, Uttar Pradesh, Jhansi, UP bus hijack, Etawah, Panna, Agra bus hijack
× RELATED பூத் ஏஜெண்டுகளுக்கு கொடுக்கப்பட்ட...