×

சத்தியமூர்த்தி பவனில் ராஜிவ் காந்தியின் சிலை: நாசே ராமச்சந்திரன் தகவல்

சென்னை: சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் திருவுருவச்சிலை அமைக்கவுள்ளதாக, தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளர் நாசே ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளர் நாசே ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமது நாற்பதாவது வயதில் இந்தியாவின் இளைய பிரதமராக பொறுப்பேற்ற ராஜிவ் காந்தி, ஏராளமான சாதனைகளைச் செய்தார். நமது நாட்டின் வறுமையை விஞ்ஞானத்தாலும், தொழில்நுட்பத்தாலும்தான் போக்கமுடியும் என்று ராஜிவ் காந்தி நம்பினார். தகவல் தொழில்நுட்பத்துறையில் புரட்சியை ஏற்படுத்தினார். இந்திய மக்களை 21ம் நூற்றாண்டிற்கு அழைத்துச் செல்ல தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்களைத் தீட்டினார்.

ஜனநாயகத்தில் அதிகாரங்கள் ஓரிடத்தில் குவிந்திருப்பதைத் தடுத்து அதை அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்க பஞ்சாயத்து ராஜ், நகர்பாலிகா சட்டத்தை கொண்டு வந்து, மக்களுக்கு அதிகாரம் என்ற லட்சியத்தில் வெற்றி கண்டவர். உலக நாடுகளோடு நல்லுறவு காண்பதில் கவனம் செலுத்தி சார்க் என்ற அமைப்பை உருவாக்க பெரும் பங்காற்றினார். லட்சக்கணக்கான தமிழக இளைஞர்கள் கம்ப்யூட்டர் வல்லுநர்கள் அதிகாரமிக்க பதவிகளோடும், நல்ல ஊதியத்தோடும் அமெரிக்காவில், ஐரோப்பிய நாடுகளில் திகழ்வதற்கு வழிவகுத்த அந்த சாதனைத்தலைவன் படுகொலை செய்யப்பட்ட தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் அந்த தியாகத்தலைவனுக்கு திருவுருவச்சிலை இல்லையே என்ற வருத்தமும், ஆதங்கமும் காங்கிரஸ் தொண்டர்களின் மனதில் உள்ளது.

நமது தமிழ்மண்ணில் உயிர்நீத்த அந்த அப்பழுக்கற்ற பேரழகு தலைவனுக்கு திருவுருவச் சிலை அமைப்பது எனது கடமையாக கருதுகிறேன். அந்த புனிதப்பணியை சிரமேற்கொண்டு செய்ய விரும்புகிறேன். காங்கிரஸ் பேரியக்கத்தின் மேலிட அனுமதியோடு சிலை அமைத்து, தேசிய தொண்டர்கள் புடைசூழ, அவர் வழியில் பயணிக்கும் எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் ராகுல் காந்தி கரங்களால் திறந்து விழா எடுப்பது அவருக்கு நாம் செய்யும் புகழஞ்சலியாகும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Tags : Rajiv Gandhi , Sathyamoorthy Bhavanil, Rajiv Gandhi statue, Nase Ramachandran, information
× RELATED ஷர்மிளா தற்கொலை விவகாரம்:...