×

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை 60% ஆக்ஸிஜன் அளவுடன் வந்த கர்ப்பிணி குணமடைந்தார்: கருவையும் காப்பாற்றி மியாட் மருத்துவர்கள் சாதனை

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு 60 சதவீத ஆக்ஸிஜன் அளவுடன் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணியை குணப்படுத்தி மியாட் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். மேலும், அவரது வயிற்றில் வளரும் கருவையும் அவர்கள் காப்பாற்றி உள்ளனர். சென்னையைச் சேர்ந்த சவுமியா (24), ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 5 மாத கர்ப்பிணியான இவருக்கு கடந்த ஜூலை மாதம் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, ஒரு மருத்துவமனைக்கு சென்றபோது மருத்துவர்களின் அறிவுறுத்தலை தொடர்ந்து அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் அவரது உடல்நிலை திடீரென்று மோசமடைந்தது.

பின்னர் அவர், சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அப்போது அவருக்கு மூச்சுத்திணறல் மிக தீவிரமாக இருந்தது. தோல் சாம்பல் நிறமாக மாறி இருந்தது. அவருக்கு ஆக்சிஜன் அளவு வெறும் 60 சதவீதம் மட்டுமே இருந்தது. எனவே, அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. உடனடியாக மருத்துவர்கள் அவருக்கு ரெம்டிசிவர் உள்ளிட்ட உயிர் காக்கும் மருந்துகளை அளித்தனர். மேலும் செயற்கை சுவாசமும் அளிக்கப்பட்டது.
மேலும் தாய் மற்றும் குழந்தை இருவரையும் காப்பாற்ற வேண்டும் என்பதில் மியாட் மருத்துவர்கள் உறுதியாக இருந்தனர்.

இதன்படி மருத்துவமனையின் முதுநிலை மகப்பேறு மருத்துவர்கள் மூலம் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யப்பட்டது. இதில் கரு உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தாய்க்கு ஏதாவது நிகழ்ந்தால் அது கருவை பாதிக்கும் என்பதால் இருவரையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மியாட் மருத்துவமனையின் பல்நோக்கு நிபுணர் குழுவினர் பல்வேறு முயற்சிகளை எடுத்தனர். இந்நிலையில் சவுமியா தொடர்ந்து வென்டிலேட்டரில் இருந்த காரணத்தால் உடல் வெப்பநிலை அதிகரித்துக்கொண்டே இருந்தது. இதனால் அவருக்கு நுண்ணுயிர் எதிர்ப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பலனாக அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இந்த முயற்சியின் வெற்றியாக 50 சதவீதம் மட்டும் செயற்கை சுவாசம் அளிக்கும் அளவிற்கு அவரது உடல்நிலை முன்னேறியது.

இதற்கிடையில் மருத்துவர்கள் அவரை சோதனை செய்த போது, அவரால் சரியாக பதில் அளிக்க முடியவில்லை. மேலும் தசைகள் பலவீனமாக இருப்பதும் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து மியாட் மருத்துவமனையின் மூத்த நரம்பியல் மருத்துவ நிபுணர்கள் அவரை பரிசோதனை செய்து, மூளையில் வீக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என்றும், இம்யூனோகுளோபின் சிகிச்சை தேவைப்படலாம் என்பதையும் கண்டறிந்தனர். இதற்கும் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்தனர். இதன் காரணமாக அவர் வென்டிலேட்டர் உதவி இல்லாமல் சுவாசிக்கும் நிலையை அடைந்தார்.

மியாட் மருத்துவர்களின் முயற்சியின் காரணமாக சவுமியா கடந்த 4ம் தேதி கொரோனா தொற்றில் இருந்து முழுவதும் குணமடைந்து வீடு திரும்பினார். மியாட் மருத்துவமனையின் பல்நோக்கு மருத்துவ நிபுணர்கள் குழுவினரின் மிகச் சிறப்பான சிகிச்சையால் தாய் மற்றும் குழந்தை இருவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்று தொடங்கிய காலத்தில் இருந்து தற்போது வரை 4500க்கு மேற்பட்ட கொரோனா நோயாளிகள் மியாட் மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tags : doctors ,fetus ,Miad , Corona, treatment, 60% oxygen level, pregnant healed, save the fetus, miat doctors, record
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...