மதுரவாயல் அருகே பூ வியாபாரிகளுக்கு தற்காலிக சந்தை அமைக்கும் பணிகள் தீவிரம்..!! வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று சிஎம்டிஏ நடவடிக்கை...!!!

சென்னை: சென்னை கோயம்பேடு மலர் சந்தை வியாபாரிகளுக்கு மதுரவாயல் அருகே தற்காலிக மார்க்கெட் அமைப்பதற்கான பணிகள் துவங்கியுள்ளன. சென்னையில் கொரோனா தொற்றானது அதிகளவில் பரவி வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து கொரோனா பரவல் காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தை கடந்த மே மாதம் மூடப்பட்டது. அதிலிருந்து காய்கறி வியாபாரிகளுக்கு திருமழிசை பகுதியில் விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் பழ வியாபாரிகள் வியாபாரம் நடத்த மாதவரம் பகுதியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பூ வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய மாற்று இடம் வழங்கப்படவில்லை. இதனையடுத்து பூ வியாபாரிகள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்ற சிஎம்டிஏ நிர்வாகம் மதுரவாயல் அருகே வானகரத்தில் இடம் தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து சுமார் 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த இடத்தை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்யும் பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளது. திருமழிசையில் காய்கறி சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளது போன்று, கடைகள் அமைக்க இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories:

>