சென்னை: கொரோனா பரிசோதனை செய்ய தமிழகம் அரசு 15.80 லட்சம் பிசிஆர் கருவிகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது. தற்போது அரசு வசம் 7.45 லட்சம் கருவிகள் உள்ளது. கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையை தமிழக அரசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்படுகிறது. இதில் 14 ஆயிரம் பரிசோதனைகள் சென்னையிலும், 55 ஆயிரம் பரிசோதனைகள் மற்ற மாவட்டங்களிலும் செய்யப்படுகிறது.
இந்நிலையில் கொரோனா சோதனைக்காக தமிழக அரசு தொடர்ந்து ஆர்டிபிசிஆர் கருவிகளை கொள்முதல் செய்து வருகிறது.
இதனை தொடர்ந்து தமிழக அரசு கூடுதலாக 15.80 லட்சம் கருவிகள் வாங்க ஆர்டர் கொடுத்துள்ளது. இதில், தென்கொரிய நிறுவனத்திடம் 12 லட்சமும், அமெரிக்க நிறுவனத்திடம் 1.3 லட்சமும், பிரான்சு மற்றும் ஜெர்மனி நிறுவனத்திடம் தலா 1 லட்சமும், இந்திய நிறுவனத்திடமிருந்து 50ஆயிரம் கருவிகளும் ஆர்டர் செய்யப்பட்டது. இவற்றில், இதுவரை, 3.72 லட்சம் கருவிகள் வந்தடைந்துள்ளது. மீதமுள்ள கருவிகள் 3 வாரத்தில் தமிழகம் வரவுள்ளது. தற்போது வரை தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்திடம் 3.15 லட்சம் பிசிஆர் கருவிகளும், மருத்துவமனைகளில் 4.3 லட்சம் கருவிகள் என மொத்தம் 7.45 லட்சம் பிசிஆர் கருவிகள் கையிருப்பு உள்ளது என தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.